சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கில்நகர்
பூங்கா என் வாழ்க்கையில் மறக்க முடியாத பல நண்பர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தினமும்
காலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது தனித்தனியாக சென்ற நாங்கள், பிறகு ஒரு
குழுவாக இணைந்து நடந்தோம். கலந்துரையாடி மகிழ்ந்தோம்.
தினமும் காலையில் நண்பர்கள் சந்தித்து தங்கள்
கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளியிடங்களுக்கு சேர்ந்து செல்வதை வழக்கமாக
வைத்திருக்கிறோம். அந்தப் பயணத்தின் போது நண்பர்கள் தங்களின் உயரத்தை மறந்து சாதாரண
மனிதராகிவிடுவார்கள். சிறு விளையாட்டுப் பிள்ளைகள் போல் மாறி கேலி - கிண்டல்,
நக்கல் - நையாண்டி என்று ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்து கொண்டு சிரித்து
மகிழ்வார்கள்.
நட்பில் உள்ள ஒவ்வொருவரும் பெரும்
சாதனையாளர்கள். வெவ்வேறு தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் நட்பு என்று வரும் போது வயது
வித்தியாசம் பார்க்காமல் இறங்கிப் பழகுகிறார்கள். எதையும் எதிர்பாராமல் நட்பு இவர்களை
இணைத்திருக்கிறது. இவர்களின் நட்பு உண்மையானது.
நண்பர்களை நேசிப்பவன் நான். இந்த நண்பர்களைப்
பற்றி, அவர்களின் அற்புத குணங்களைப் பற்றி நான் தனிமையில் சிந்திக்கும் போது, ஏன்
இவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சேமிக்க கூடாது என்று எனக்குள் தோன்றியது. அது பல தலைமுறைக்கு
உதவும்படி இருக்குமே என்கிற எண்ணத்தில் ஆவணப்படுத்த முயற்சி செய்தேன். அதன்
வெளிப்பாடுதான் இந்த ‘சிகரம் தொட்டவர்கள்’ நூல்.
ஒவ்வொருவரும் தனது உழைப்பால்
உயர்ந்தவர்கள். பல சாதனைகளுக்குச் சொந்தக்கார்கள். கடுமையாக உழைத்து சிகரம்
தொட்டவர்கள். இவர்களைப் பற்றி எழுதும் போது என் மனம் முழுவதும் மகிழ்ச்சியும்
பெருமையும் நிறைந்ததை உணர முடிந்தது.
வாழ்க்கையில் பல துறைகளில் பெற்றுள்ள
அனுபவங்களின் துணையோடு இப்படி ஒரு கட்டுரைத் தொகுப்பை எழுதத் தூண்டிய எனது நண்பர் கல்வியாளர்
சுடலைமுத்து பாண்டியன் அவர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் முதலில் தெரிவித்துக்
கொள்கிறேன். எப்படிப்பட்ட திறமை யாரிடம் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு அவற்றை
ஊக்குவிப்பதில் சுடலைமுத்து பாண்டியன் அவர்களுக்கு தனி இடம் உண்டு.
அடுத்து என்னுடைய முயற்சிகளுக்கு
உறுதுணையாக இருந்து வழிகாட்டும் ‘நடராஜ்’ தியேட்டர் அதிபர் வெங்கடாசலம், அவ்வப்போது
ஆலோசனைகள் சொல்லி ஊக்கப்படுத்தும் ‘தளபதி’ பிரேம்குமார் ஆகியோருக்கும் என்னுடைய
வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது வரலாற்று சுவடு மட்டுமே. படிக்க சுவாரஸ்யம்
கூட்ட வேண்டும் என்பதற்காகப் புகழ்ச்சியான எந்த தகவல்களையும் தரவில்லை.
இந்த நூல் குறித்த உங்களின் விமர்சனங்களை
திறந்த மனதோடு வரவேற்கிறேன். நன்றி!
- ஜி.பாலன்
No comments:
Post a Comment