Thursday, May 2, 2019

வாழ்த்து!

ஆர்.தங்கையா

கில் நகர் பூங்காவுக்கு வரும் நண்பர்கள் சிலரைத் தேர்வு செய்து அவர்களின் வரலாறு குறித்த பதிவாக இந்த சிகரம் தொட்டவர்கள் என்கிற நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் அருமை நண்பர் பாலன். அவரின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன்.

நண்பர்களின் வாழ்க்கை வரலாறுகளை ரசிக்கத்தக்க முறையில் சுருக்கித் தந்திருப்பது அவரது உழைப்புக்கோர் சான்று. ஒவ்வொரு பக்கத்தையும் வியப்போடு வாசிக்க வைத்திருக்கிறார். பாலனின் எழுத்து நடை படிக்க ஆர்வத்தைத் தூண்டியது. 

நண்பர் சுடலைமுத்து பாண்டியன் அவர்களைப் பற்றி வாசிக்கிற போது அவரைப் பற்றி பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல தோழர் நடராசன், கிருஷ்ணன், அமல்ராஜ், முருகன், வெங்கடாசலம், பிரேம்குமார், ராஜன் பாபு, அல்போன்ஸ் என அனைவரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்த நூல் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது, தன்னம்பிக்கையைத் தூண்டும் விதத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. .

கட்டுரைகளுடன் நண்பர்களின் அரிய புகைப்படங்கள் உள்ளத்தைத் தொடும் விதமாக  அமைந்திருக்கின்றன. நண்பர்களின் குடும்பத்தினர் அனைவரும் இந்த நூலை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என விரும்புகிறேன்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அன்புடன்
ஆர்.தங்கையா

அறிமுகம்


சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கில்நகர் பூங்கா என் வாழ்க்கையில் மறக்க முடியாத பல நண்பர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தினமும் காலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது தனித்தனியாக சென்ற நாங்கள், பிறகு ஒரு குழுவாக இணைந்து நடந்தோம். கலந்துரையாடி மகிழ்ந்தோம்.

தினமும் காலையில் நண்பர்கள் சந்தித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை  வெளியிடங்களுக்கு சேர்ந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அந்தப் பயணத்தின் போது நண்பர்கள் தங்களின் உயரத்தை மறந்து சாதாரண மனிதராகிவிடுவார்கள். சிறு விளையாட்டுப் பிள்ளைகள் போல் மாறி கேலி - கிண்டல், நக்கல் - நையாண்டி என்று ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்து கொண்டு சிரித்து மகிழ்வார்கள்.

நட்பில் உள்ள ஒவ்வொருவரும் பெரும் சாதனையாளர்கள். வெவ்வேறு தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் நட்பு என்று வரும் போது வயது வித்தியாசம் பார்க்காமல் இறங்கிப் பழகுகிறார்கள். எதையும் எதிர்பாராமல் நட்பு இவர்களை இணைத்திருக்கிறது. இவர்களின் நட்பு உண்மையானது.

நண்பர்களை நேசிப்பவன் நான். இந்த நண்பர்களைப் பற்றி, அவர்களின் அற்புத குணங்களைப் பற்றி நான் தனிமையில் சிந்திக்கும் போது, ஏன் இவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சேமிக்க கூடாது என்று எனக்குள் தோன்றியது. அது பல தலைமுறைக்கு உதவும்படி இருக்குமே என்கிற எண்ணத்தில் ஆவணப்படுத்த முயற்சி செய்தேன். அதன் வெளிப்பாடுதான் இந்த ‘சிகரம் தொட்டவர்கள்’ நூல்.

ஒவ்வொருவரும் தனது உழைப்பால் உயர்ந்தவர்கள். பல சாதனைகளுக்குச் சொந்தக்கார்கள். கடுமையாக உழைத்து சிகரம் தொட்டவர்கள். இவர்களைப் பற்றி எழுதும் போது என் மனம் முழுவதும் மகிழ்ச்சியும் பெருமையும் நிறைந்ததை உணர முடிந்தது.

வாழ்க்கையில் பல துறைகளில் பெற்றுள்ள அனுபவங்களின் துணையோடு இப்படி ஒரு கட்டுரைத் தொகுப்பை எழுதத் தூண்டிய எனது நண்பர் கல்வியாளர் சுடலைமுத்து பாண்டியன் அவர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். எப்படிப்பட்ட திறமை யாரிடம் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு அவற்றை ஊக்குவிப்பதில் சுடலைமுத்து பாண்டியன் அவர்களுக்கு தனி இடம் உண்டு.

அடுத்து என்னுடைய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டும் ‘நடராஜ்’ தியேட்டர் அதிபர் வெங்கடாசலம், அவ்வப்போது ஆலோசனைகள் சொல்லி ஊக்கப்படுத்தும் ‘தளபதி’ பிரேம்குமார் ஆகியோருக்கும் என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது வரலாற்று சுவடு மட்டுமே. படிக்க சுவாரஸ்யம் கூட்ட வேண்டும் என்பதற்காகப் புகழ்ச்சியான எந்த தகவல்களையும் தரவில்லை.
இந்த நூல் குறித்த உங்களின் விமர்சனங்களை திறந்த மனதோடு வரவேற்கிறேன். நன்றி!
-   ஜி.பாலன்

Monday, April 22, 2019

கல்வியாளர் சுடலைமுத்து பாண்டியன்


திரு சுடலைமுத்து பாண்டியன்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளம் கிராமத்தை சேர்ந்த சண்முகத்தேவர் - சுப்பம்மாள் தம்பதியருக்கு 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி  மகனாகப் பிறந்தவர், சுடலைமுத்து பாண்டியன்.

இவருடன் பத்துப்பேர் பிறந்தனர். சிவபாண்டியன் என்கிற தம்பியும், பொன்னுத்தாய், குருவம்மாள், அங்கம்மாள், வேலம்மாள் ஆகிய நான்கு சகோதரிகள் மட்டுமே தங்கினர்.

அந்தக் காலத்தில் மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால், அந்த நான்கு பேர்களும் இந்த பூமியில் தங்கவில்லையாம். ‘’நீங்களெல்லாம் தப்பிப் பிழைத்தவர்கள்’’ என்று இவர்களைப் பற்றி தாயார் சுப்பம்மாள் பெருமையாகக் கூறுவாராம்.

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் கழக உயர்நிலைப் பள்ளியில் பழைய எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்த சுடலைமுத்து பாண்டியன், தனது பதினேழாவது வயதில் காவல்துறையில் சேர்ந்தார்.

1965 ஆண்டு முதல் இரண்டரை ஆண்டுகள் பாளையங்கோட்டையில் காவலராக பணியாற்றிய சுடலைமுத்து பாண்டியன், அதன் பிறகு சென்னையில் சிறிது காலம் ஆயுதப்படையிலும், காவல் துறையின் தொலைபேசி இணைப்பகத்திலும் பணியாற்றினார்.

மனைவி மற்றும் பெற்றோருடன் சுடலைமுத்து பாண்டியன்  
தமிழக அரசின் காவல்துறையில் பணியாற்றினாலும், போலீஸ் டெலிபோன் எக்சேஞ்ச்சில் பணியாற்ற இவருக்கு மத்திய அரசு பயிற்சி அளித்துள்ளது. காவல் துறையின் தொலைபேசி இணைப்பகத்தில் பதினொரு ஆண்டுகள் பணியாற்றிய போது, தமிழகம் முழுவதும் ஏராளமான காவல்துறை நண்பர்களைச் சம்பாதித்திருந்தார், சுடலைமுத்து பாண்டியன். 

இயற்கையிலேயே போராட்டக் குணம் நிறைந்த சுடலைமுத்து பாண்டியன், 1979 ஆம் ஆண்டு போலீஸ் போராட்டம் தொடங்கிய போது, அதில் முக்கிய பங்குவகிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். காரணம், அனைத்து போலீஸ் நிலையத்தையும் இணைக்கும் தொலைபேசி இணைப்பகம் அவர் வசமாக இருந்தது.

லஞ்சம் வாங்க போக மாட்டோம், பொய் கேஸ் போடுவதற்கு உதவ மாட்டோம், பணக்காரர்கள், பண்ணையார்களின் அநியாயத்திற்குத் துணை போகமாட்டோம், உழைக்கும் மக்களுக்கு நேர்மையாக இருப்போம், உயர் அதிகாரிகள் வீட்டிற்கு டிரைவராகவும், உதவியாளராகவும் வேலை செய்ய மாட்டோம் என்று பல போலீசார் கம்பீரமாக இருந்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன்....
அவர்களுக்கு உரிமை அளித்தது போல, போலீசார் தங்களுக்குச் சங்கம் வைத்துக் கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். அரசு உத்தரவு பிறப்பித்ததும் பல போலீசார் வரவேற்று சங்கம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

போலீசார் சங்கம் வைத்தால் தங்களுக்கு எதிராக இருப்பார்கள் என்று எண்ணிய உயர் போலீஸ் அதிகாரிகள், உளவுத்துறையினரை வைத்து சங்கம் அமைக்க முடியாத வகையிலும், எம்.ஜி.ஆருக்கு எதிராக போலீசார் இருப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கவும் முயன்றுள்ளனர்.  

உளவுத்துறையின் செயலால், நாடு முழுவதும் போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி கோரிப் போராட்டங்கள் எழுந்தன. அதில் முக்கியமான நபர்களில் ஒருவராக இருந்து சுடலைமுத்து பாண்டியனும் செயல்பட்டிருக்கிறார். இதனால், அவருக்கு காவல்துறையில் வேலை பறிபோனது. அந்த விவரங்களைப் போலீஸ் போராட்டம் என்கிற தனி நூலாக எழுதி உள்ளார், திரு சுடலைமுத்து பாண்டியன்.

போலீஸ் போராட்டத்தின் போது பத்திரிகையாளர் சோலை அவர்களுடன் நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பை பெற்ற சுடலைமுத்துப் பாண்டியன், சோலை அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றிய ‘மக்கள் செய்தி’ பத்திரிகையில் சில காலம் துணை ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.

போலீஸ் போராட்டத்தின் போது சோலை அவர்கள் செய்த உதவியை நன்றியோடு குறிப்பிடும் சுடலைமுத்து பாண்டியன், திரு சோலை அவர்கள் மூலமாக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரைச் சந்திக்கிற வாய்ப்பை பலமுறை பெற்றுள்ளார். அதுவும் ஒரு போராட்ட வீரனாக....

போலீஸ் சங்கம் தொடங்கப் போராட்டம், போலீசாருக்காக எம்.ஜி.ஆரிடம் சென்று பேசுதல், எம்.ஜி.ஆரின் உதவியைப் பெற்று வேலை இழந்த சக போலீசார் குடும்பத்துக்கு உதவுவது என்று பல சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் சந்தித்திருக்கிறார்.

இளம் வயதில் சுடலைமுத்து பாண்டியன் 
போலீசார் போராட்டம் குறித்து பேச்சு வந்தாலே ‘’எங்கே நம்ம போலீஸ்’’ என்று எம்.ஜி.ஆர். விசாரிக்கும் அளவிற்கு அவரது உண்மையான செயல்பாடுகள் இருந்துள்ளன.

உண்மைக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சுடலைமுத்து பாண்டியன், போலீஸ் வேலையில் சேர்கிற வாய்ப்பை மீண்டும் பெறுகிறார்.

1971 முதல் 1979 வரை காவல்துறை தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றியவர், போராட்டக் காலங்களுக்குப் பிறகு மீண்டும்  1980 முதல்  1986  வரை அண்ணாசாலை காவல் நிலையத்திலும், ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்திலும் தலைமைக் காவலாரக பணியாற்றி உள்ளார்.

ஆரம்பத்தில் சூளைமேடு பகுதியில் உள்ள பஜனைகோவில் தெருவில் வசித்த சுடலைமுத்து பாண்டியன், அதன் பிறகு 1975 ஆம் ஆண்டு... இப்போது இருக்கும் சுப்பாராவ் நகர் பகுதிக்கு செல்கிறார். இங்கு சுப்பாராவ் நகரை நிறுவி அதற்கு நிறுவன தலைவராகச் செயலாற்றி வருகிறார்.

சுப்பாராவ் நகரில் ஏழை மக்கள் நூற்றி ஐம்பது பேருக்கும் மேல் குடியிருக்க இடம் அளித்துள்ளார். இதில் தொழிற்சங்கத் தலைவர்கள் ஏழு பேருக்கு இடம் அளித்ததுள்ளார். 

சுப்பாராவ் நகருக்கு அவர் சென்ற போது நிறைய பிரச்சினைகளும் அவரை எதிர்கொண்டிருந்தன. வழிகள் கிடையாது. கால்வாய்ப் பிரச்சினை என்று தினம் ஒரு பிரச்சினை தோன்றியது. அவற்றைச் சரி செய்ய பெரிய போராட்டங்களை அவர் நடத்த வேண்டி இருந்தது.

ஏழாண்டுகள் காவல் துறைக்கான போராட்டத்தைச் சந்தித்தவர், இங்கும் ஏராளமான போராட்டங்களைப் பத்தாண்டுக்கும் மேல் சந்தித்தார். பங்கெடுத்த போராட்டங்களில் எல்லாம் வெற்றியை கண்டவர், தன்னால் பல வெற்றியாளர்களை உருவாக்க முடியும் என்று ஒருநாள் கனவு கண்டார்.

அதனால், காவல் துறையில் இருந்து 1986 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு.பெற்று, கல்வி நிறுவனம் தொடங்கினார். விநாயகா வித்யாலயா என்கிற பெயரில் காந்தி சாலையில் தொடங்கிய அந்தப் பள்ளி, பல மாணவ, மாணவிகளை உயர்ந்த நிலைக்குச் செல்ல பாதை அமைத்துக் கொடுத்தது.

1991ல் மதுரவாவயல் பகுதியில் உள்ள லட்சுமி நகரில் தனது சகோதரியின் பெயரில் வேலம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைத் தொடங்கினார். பிறகு 1992ல் மதுரவாயல் ஸ்ரீலட்சுமி நகரில் வேலம்மாள் வித்யோதயாஸ்ரம் மெட்ரிக் பள்ளியை தொடங்கினார்.  

1995ல் மதுரவாயல் கணபதி நகரில் வேலம்மாள் வித்யோதயா நர்சரி அண்ட் பிரைமரி ஸ்கூல் துவங்கியவர், திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் பகுதியில் வேலம்மாள் அகடமி மெட்ரிக் பள்ளியையும் 2012ல் தொடங்கினார்.

2017ல் பட்டாபிராம் அருகே உள்ள சோராஞ்சேரியில் ஸ்ரீகுரு அக்காசாமி வேலம்மாள் மெட்ரிக் பள்ளியை தொடங்கி, அங்கும் தனது கல்வி பணியை தொடர்கிறார். இவரது கல்வி நிறுவனங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

தாய் இல்லாத, தந்தை இல்லாத மாணவ மாணவிகள் இலவசமாக கல்வி பெற உதவுகிறார். தொடந்து முப்பது ஆண்டுகள் இவரிடம் நூற்றுக்கும் அதிகமான மாணவ மாணவிகள் இலவசக் கல்வி பெற்றுள்ளனர். கட்டணம் கட்டவில்லை என்று எந்த மாணவ, மாணவியையும் இவரது கல்வி நிறுவனம் திருப்பி அனுப்பியது கிடையாது.

குறைந்த கட்டணம், தரமான கல்வி என்று இயங்கும் திரு சுடலைமுத்து பாண்டியன், சிறு வேலையாக இருந்தாலும் அதில் சமூக நோக்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர். இவரது கல்வி நிறுவனத்தில் அதிகமான தலித் மக்களுக்கு வேலை வழங்கி உள்ளார்.

அவரது கல்வி நிறுவனங்கள் மூலம் பல சாதனையாளர்கள் உருவாகி உயர்ந்து ஒளிர்கின்றனர்.  

கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தை சேர்ந்த சுடலைமுத்து தேவர் – பேச்சியம்மாள் தம்பதியின் மகள் செண்பகவல்லி என்பவரை 1963 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06 ஆம் தேதி இவர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ராஜா முத்துப்பாண்டியன் என்கிற மகனும், காந்திமதி, சௌதாமணி என்கிற இரு மகள்களும் பிறந்தனர்.

தனது மகன் ராஜா முத்துப்பாண்டியன் வழக்கறிஞர் படிப்பை முடித்த போது, தனது மைத்துனர் முருகையா – ராமலட்சுமியின் மகள் முருகலட்சுமியைத் திருமணம் செய்து வைத்துள்ளார். முருகலட்சுமி எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.பில். படித்துள்ளார்.

ராஜா முத்துப்பாண்டியன் - முருகலட்சுமி தம்பதினருக்கு சௌந்தர்ய லட்சுமி என்கிற மகளும், விஜய பிரபாகரன் என்கிற மகனும் உள்ளனர். சௌந்தர்ய லட்சுமி பன்னிரண்டாம் வகுப்பும், விஜய பிரபாகரன் ஆறாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

எம்.ஏ. பிஎட் படித்துள்ள மூத்தமகள் காந்திமதியை, கோவில்பட்டி சண்முகய்யா – செண்பகம் தம்பதியின் மகன் காந்தி சுப்பிரமணியம் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு கார்த்திக் சண்முகம் என்கிற மகனும், ஐஸ்வர்யா என்கிற மகளும் பிறந்தனர்.  
.
பி.காம். படித்துள்ள கார்த்திக் சண்முகம், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். தற்போது பர்ஸ்ட் டிவிஷன் பிளேயராக களத்தில் விளையாடி வருகிறார். ஐஸ்வர்யா, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 

இரண்டாவது மகள் சௌதாமணியைத் தனது சகோதரி குருவம்மாள் – திருச்சிற்றம்பலம் மகனும், எம்.ஏ.பிஎட் பட்டதாரியுமான பாரத்குமார் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு குருஅருள் செல்வி என்கிற ஒரு மகள் இருக்கிறார். அவர், தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஒரு போலீசாக வாழ்க்கையைத் தொடங்கிய சுடலைமுத்து பாண்டியன், ஒரு கல்வியாளராகவும் இப்போது உயர்ந்து நிற்கிறார். அவரது சாதனைகளை, உதவிகளைப் பற்றி எழுதினால் குறைந்தது ஐந்து புத்தகங்கள் வெளியிட வேண்டும். அந்தளவுக்கு செய்திகள் ஏராளமாக எனக்குள் குவிந்து கிடக்கின்றன.

ஆனால், அப்படித் தன்னைப் பற்றி எழுதுவதை அவர் விரும்பவில்லை. காலம் என்ன இட்டுச் செல்கிறதோ, அந்த வேலைகளைச் செய்து கொண்டு போகிறேன் என்பார்.

தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து கொள்ளும் சுடலைமுத்து பாண்டியன், எப்போது தூங்குவார் என்பது அவருக்கே தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் உழைப்பு மட்டுமே.

சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். வேலைகளில் மட்டுமே அவரது மனம் சுற்றிக் கொண்டு இருக்கும். ஞாயிறு விடுமுறை என்று வீட்டில் ஓய்வெடுக்க மாட்டார். வழக்கம் போல தனது கல்வி நிலையங்களுக்குச் சென்று விடுவார்.

ஒவ்வொரு நாளும் இன்று என்ன வேலைகள் இருக்கின்றன, அதில் யாருக்காவது உதவுகிற வாய்ப்பு இருக்கிறதா என்று சமூக நோக்குடனே சிந்திப்பார்.

பொது மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க, பொறுப்பாக இருந்து பாடுபட்டிருக்கிறார். அதே போல பலருக்கு கஷ்ட நேரத்தில் கை கொடுத்து உதவிகள் வழங்கி இருக்கிறார். அந்த உதவிகளை வெளியில் வெளிபடுத்திக் கொள்வது கிடையாது.

வீட்டின் அருகில் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயத்தை எழுப்பி, அந்த ஆலயத்தின் நிறுவனராக இருக்கிறார். அந்த கோவிலின் விழாக்களில் பொதுமக்களில் ஒருவராக கலந்து கொள்வாரே தவிர, என்றுமே தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளமாட்டார்.

‘’நான் யோக்கியன்... . சாதுன்னு நினைச்சிடாதிய... வம்புன்னா வம்புதான்’’ என்று ஆத்திரப்படும் போது அதிரவைக்கும் சுடலைமுத்து பாண்டியன், பல பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

எத்தனை வெற்றிகள் வந்து அவரது புகழையும், வருமானத்தையும் உயர்த்தினாலும் எளிமையான மனிதராக அனைவரிடத்திலும் அன்பு காட்டிப் பழகக் கூடிய அற்புதமான மனிதர் இவர்.
 - ஜி.பாலன் 

நடராஜ் தியேட்டர் அதிபர் வெங்கிடாசலம்

திரு ஆர்.வெங்கிடாசலம்

கர்மவீரர் காமராஜர் சேலம் நகருக்கு எப்போது சென்றாலும் ரத்தினவேல் கவுண்டரின் அழகாபுரம் வீட்டிற்கு மறக்காமல் செல்வார். அங்குதான் அவருக்கு மதிய சாப்பாடு. அந்த வீட்டுச் சாப்பாடு என்றால் காமராஜருக்கு ரொம்ப பிடிக்கும். 

அதேபோல காமராஜர் என்றால், ரத்தினவேல் கவுண்டருக்கு ரொம்ப பிரியம். காமராஜரின் தொண்டனாக செயல்பட்டவர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1958 முதல் 1967 வரை பத்தாண்டுகள் சேலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் பேசத் தெரிந்தவர், ரத்தினவேல் கவுண்டர்.

இரத்தினவேல் கவுண்டருக்கு ராசாத்தி அம்மாள், கந்தாயி அம்மாள் என இரு மனைவிகள். பழனிச்சாமி, ஜெயக்குமார், ஜெயப்பிரகாஷ் ஆகிய மூன்று மகன்களும், நாகலட்சுமி, சரஸ்வதி, ஜெயலட்சுமி, ஜெகதாம்பாள் ஆகிய நான்கு மகள்களும் ராசாத்தி அம்மாளுக்கு பிறந்தவர்கள். வெங்கடாசலம் என்கிற மகனும், விஜயகுமாரி என்கிற மகளும் கந்தாயி அம்மாளுக்குப் பிறந்தவர்கள்.

மனைவி  சண்முகவள்ளியுடன் வெங்கடாசலம்
நமது நண்பர் வெங்கடாசலம் 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பிறந்தவர். லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த வெங்கடாசலம், அதன் பிறகு தனது சகோதரர்களுடன் இணைந்து தங்களுடைய கதர்க் கொடி பீடி கம்பெனியைக் கவனித்துக் கொண்டார்.

சேலத்தில் பெரும் புகழுடன் விளங்கிய திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், தனக்கு உதவி தேவைப்படும் போது ரத்தினவேல் கவுண்டரை அழைத்துக் கொள்வார்.

சினிமா மீது டி.ஆர்.சுந்தரம் வைத்திருந்த காதல், ரத்தினவேல் கவுண்டரையும் கவர்ந்தது. தானும் ஒரு திரையரங்கம் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் ரத்தினவேல் கவுண்டரின் மனதில் எழுந்தது. 

அதன் விளைவாக சேலம் ஐந்து ரோட்டில் ரத்னா என்கிற திரையரங்கைக் கட்டினார்.

சென்னையில் உள்ள சூளை பகுதியில் நடராஜ் திரையரங்கை நடத்தி வந்த மும்பையை சேர்ந்த பாபுலால் புவானா, அந்த திரையரங்கை விற்க முடிவு செய்திருக்கிறார் என்கிற செய்தி அறிந்து, அந்த திரையரங்கையும் விலைக்கு  வாங்கினார் ரத்தினவேல் கவுண்டர்.

நடிகர் திலகம் சிவாஜியுடன் வெங்கடாசலம்
நடராஜ் திரையரங்கைக் கவனித்துக் கொள்ளச் சென்னைக்குத் தனது மகன் வெங்கடாசலத்தை ரத்தினவேல் கவுண்டர் அனுப்பி வைத்திருக்கிறார்.

நடராஜ் திரையரங்கைக் கவனித்துக் கொள்ள சென்னை வந்த வெங்கடாசலம் சென்னையிலேயே திருமணம் செய்து கொள்வார் என்று அப்போது நினைக்கவில்லை.

பீடி கம்பெனியை எப்படித் தனது சகோதரர்களுடன் இணைந்து கவனித்துக் கொண்டாரோ, அதே போல திரையரங்கு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார், வெங்கடாசலம்.

தந்தை ரத்தினவேல் கவுண்டரின் மறைவுக்குப் பிறகு, சேலம் செவ்வாப்பேட்டை அரிசிபாளையம் பகுதியில் பெரிய ரத்னா திரையரங்கம், அஸ்தம்பட்டியில் ரோகினி திரையரங்கம், கன்னங்குறிச்சியில் ஆனந்த் சினிமா என ஐந்து திரையரங்குகளாக, அவர்களது திரைத்தொழில் விரிவடைந்தது.

மகன் பாலாஜி வெங்கடாசலம்
சேலத்தில் மிகப்பெரிய திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் உதயமானது. அதன் விளைவு?, அழகாபுரம் பகுதியில் ரத்னவேல் கல்யாண மண்டபம் மிகப் பிரமாண்டமாக உருவானது.

அந்தத் திருமண மண்டபத்தில் எம்.ஜி.ஆர். தலைமையில் பழனிச்சாமி – விஜயலட்சுமி திருமணம், கலைஞர் கருணாநிதி தலைமையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் செழியன் திருமணம் என பல புகழ் பெற்ற விஐபிக்களின் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. விழா ஒன்றுக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, அங்கு தங்கியதுடன், அங்கு இடியாப்பமும், முட்டை பாயாவும் சாப்பிட்டுப் பாராட்டி உள்ளார். 

சேலத்தில் உள்ள ரத்னா திரையரங்கம், ரத்னா காம்ளக்ஸ் ஆகியவற்றை இவரது சகோதரர் பழனிச்சாமி கவனித்து வருகிறார். சேலம் ஐந்து ரோட்டில் பிரமாண்டமாக உள்ள ரத்தினவேல் திருமண மண்டபத்தையும், ரத்தினவேல் காம்ப்ளக்ஸ் கட்டடத்தையும் இன்னொரு சகோதரரான ஜெயக்குமார் கவனித்து வருகிறார்.

வடபழனி முருகன் கோவிலைக் கட்டிய ஐந்து தர்மகர்த்தாக்களில் ஒருவர் ஞானசுந்தர நாயக்கர். சண்முகம் பிராண்ட் ஸ்டீல்ஸ் டிரங்க் ஒர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அவருக்கு சாந்தலட்சுமி, சண்முகவள்ளி என இரு மகள்களும், பழனிச்சாமி என்கிற ஒரு மகனும் உள்ளனர். இதில் சண்முகவள்ளி என்பவரை வெங்கடாசலம் திருமணம் செய்து கொண்டார்.1973 ஆம் ஆண்டு ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற திருமண விழாவில் தொழில் அதிபர்கள், திரையுலகினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வெங்கடாசலம் - சண்முகவள்ளி தம்பதிக்கு ஜெயஸ்ரீ என்கிற மகளும், பாலாஜி என்கிற மகனும் பிறந்தனர்.

எத்திராஜ் கல்லூரியில் அக்ரிகல்சர் படித்த தனது மகள் ஜெயஸ்ரீயை, அண்ணாசாலையில் உள்ள குணா காம்ப்ளக்ஸ் உரிமையாளரும், பில்டருமான தர்மலிங்க நாயக்கரின் மகன் ஞானசேகர் என்பவருக்கு 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார், வெங்கடாசலம். 

ஞானசேகர் – ஜெயஸ்ரீ தம்பதிக்கு சுஜித்குமார், கணேஷ்பாபு என இருமகன்கள் உள்ளனர்.

லயோலா கல்லூரியில் டிகிரி முடித்த தனது மகன் பாலாஜிக்கு, சென்னை கே.கே.நகரை சேர்ந்த தொழிலதிபர் தெய்வசிகாமணி நாயக்கரின் மகள் ஜோதீஸ்வரியை 2005 ஆண்டு திருமணம் செய்து வைத்தார். அந்த திருமண விழா ராணி மெய்யம்மை ஹாலில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

பாலாஜி – ஜோதீஸ்வரி தம்பதிக்கு தேஜஸ் கண்ணா என்கிற ஒரு மகன் உள்ளார்.

தன் வாழ்நாள் முழுவதும் வெற்றியை சுவைத்த வெங்கடாசலம், தோல்வியை ஒரு முறை கூட சந்தித்ததில்லை. ஆனால், அவரை நிலை குலைய வைத்தது, மகன் பாலாஜின் திடீர் மரணம்.

சென்ற 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி பாலாஜி, அவரைவிட்டுப் பிரிந்தார். இப்போது அவருக்கு ஆறுதலாக இருப்பது, ஆறாம் வகுப்பு படிக்கும் அவரது பேரன் தேஜஸ் கண்ணா.

அதீத  தன்னம்பிக்கையும் பலவகைத் திறனும் கொண்டு எங்களைக் கவர்ந்தவர் வெங்கடாசலம். தனது குணத்தால் பல இதயங்களைக் கொள்ளை கொண்ட இவர், எங்கள் நட்பு வட்டத்திற்கு கிடைத்தது பெரும் வரம்.

சமூகப் போராளி எஸ்.நடராசன்

தோழர் எஸ்.நடராசன்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பணகுடி கீழபுதூர் கிராமத்தை சேர்ந்த சுப்பையா – இசக்கியம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக 1946 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி பிறந்தவர் தோழர் எஸ்.நடராசன்.

பக்தியின் ஈடுப்பாட்டால் தனது மகன்களுக்கு மாசானம், சுடலைமுத்து, ராசய்யா, பேச்சிமுத்து என்று பெயர் வைத்த சுப்பையா, கோரியூர் பள்ளியில் சேர்த்த போது, பேச்சிமுத்து என்கிற பெயரை நடராசன் என்று மாற்றி வைக்க ஆசிரியர் கேட்ட போது, அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இடது சாரி இயக்கத்தினரால் தோழர் எஸ்.என். என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்ற நடராசன், ஐந்தாம் வகுப்பு வரை கோரியூர் பள்ளியிலும், எட்டாம் வகுப்பு வரை வடலிவிழை உயர்நிலைப் பள்ளியிலும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பை வள்ளியூர் மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தார்.

அவரது சகோதரர் ராசய்யா, சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் காபித் தூள் கடை வைத்திருந்தார். அவரை பார்க்க சென்னை வந்த நடராசன், அவருடன் தாங்கியவாறு தனது படிப்புக்குத் தகுந்த வேலைக்கு முயற்சி செய்தார்.

காவல் துறையில் இருந்தும், பெரம்பூரில் இருந்த பிஅன்ட்சி மில்லில் இருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்தன. போலீஸ் வேலைக்கு மாதம் எழுபது ரூபாய். பி. அன்ட் சி மில்லில் மாதம் 350 ரூபாய் சம்பளம். இதனால்,  பி. அன்ட் சி மில்லில் வேலைக்குச் சேர்ந்தார் நடராசன்.

சிறுவயதில் நடராசன் 
பக்கிங்காம் கர்நாடிக் மில் என்று அழைக்கப்படும் பி.அன்ட் சி மில்லில் 1967 ஆம் ஆண்டு 15,000 தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்ய தொடங்கிய நடராசன், அந்தத் தொழிலாளர்களுக்குப் பொதுச் செயலாளராகப் பிற்காலத்தில் வரப்போகிறாம் என்பது அவருக்கே தெரியாது.

வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது ஆண்டில் பி. அன்ட் சி மில் சென்னை தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகப் பதினெட்டு பேரில் ஒருவராக 1970 ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அனைவராலும் கொண்டாடப்பட்ட எஸ்.எஸ்.சி. அந்தோணி பிள்ளை தலைவராகத் தேர்வாகி இருந்தார்.

வட சென்னையில் உள்ள பல நிறுவனங்களின் தொழிலாளர் அமைப்பின் தலைவராக இருந்த அந்தோணி பிள்ளை, பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பெரும் செல்வாக்கும் மரியாதையும் பெற்றிருந்த அந்தோணி பிள்ளையின் நிர்வாகத்தில் முக்கிய நபராக நடராசன் கவனிக்கப்பட்டார்.

தோழர் நல்லக்கண்ணுவுடன் நடராசன்
மில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இரவு பகல் பாராது சிந்திக்கத் தொடங்கிய நடராசன், தொழிலாளர்களுக்காக நிர்வாகத்துடன் பேசுவது, விடுமுறை உட்பட தொழிலாளர்களின் பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவியாக இருப்பது என்று அனைத்திலும் தனது பங்களிப்பை வழங்கினார்.

பள்ளியில் மதிய உணவு அளித்த கர்மவீரர் காமராஜர் மீது கொண்ட மரியாதையினால், ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருந்த நடராசன், பிறகு தி.மு.க. தொழிற்சங்கத்திற்கு ஆதரவாக இருந்து செயல்பட்டார்.

தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய மூன்றாயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என ஒரு போராட்டம் 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதில் முப்பது தொழிலாளர்களுடன் சேர்த்து அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஒரு வருடத்திற்குப் பிறகு இருபத்தி எட்டு பேர்களுடன் மீண்டும் வேலைக்குத் திரும்பினார்.

தாய் இசக்கியம்மாள் 
மூன்றாயிரம் புதிய தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சினை வந்த போது அதற்கு முதல் ஆளாக நின்று கேள்வி கேட்க ஆரம்பித்தவர், தொழிலாளர்களைக் காப்பாற்ற சங்க விதிமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று ஏழாவது விதிமுறையை மாற்ற போராடிய க.சுப்புவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

பி.அண்ட் சி மில் தொழிற்சங்கத்திற்கு எதிராக சி.பி.எம். கட்சியில் இருந்து வி.பி.சிந்தன், மைதிலி சிவராமன் உட்பட பலர் கொண்ட ஐக்கிய குழு தயாரான போது, அதில் இணைந்து கொண்டார்.

1972 - ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் அமைப்பின் தொடர்பு இவருக்கு கிடைக்கிறது. அவர்களின் சிந்தனையோடு பி.அண்ட் சி மில் தொழிலாளர்கள் பலரை இணைத்து உழைக்கும் மக்கள் மாமன்றம் பி.அண்ட் சி மில் கிளை என்கிற அமைப்பை தொடங்குகிறார் எஸ்.நடராசன்.

தலைவராக எஸ்.நடராசன், பொதுச்செயலாளராக பிரான்சிஸ், பொருளாளராக மாதவராவ் ஆகியோர் பொறுப்பேற்றனர். 

பல தொழிற்சங்கங்கள் கட்சி சார்ந்து இயங்கிய போது, கட்சி சாரா அமைப்பாக உழைக்கும் மக்கள் மாமன்றம் பி அண்ட் சி மில் கிளை செயல்பட்டது. அதற்கு ஆதரவாளர்கள் பெருகினர்.

மனைவி பானுமதியுடன் நடராசன்
யூனியன் தேர்தல் 1975-ல் நடைபெற இருந்த காலகட்டத்தில் க.சுப்பு எமர்சென்சியில் கைதான போது, தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் குசேலர் போட்டி போட எண்ணி அனைத்து தொழிற்சங்க தோழர்களையும் அழைக்கிறார். அவருக்கு நடராசனின் உழைக்கும் மக்கள் மாமன்றம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.

1976 ஆம் ஆண்டு குசேலர் தலைமையில் உள்ள அணியும், அந்தோணி பிள்ளை தலைமையில் உள்ள அணியும் போட்டியில் கலந்து கொண்டன. குசேலர் தலைவராகவும், அந்தோணி பிள்ளை அணியைச் சேர்ந்த சி.கே.நாராயணன் பொதுச் செயலாளராகவும் வெற்றி பெறுகின்றனர். அதன் பிறகு 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குசேலர் தலைவராகவும், எஸ்.நடராசன் பொதுச் செயலாளராகவும் தேர்வாகின்றனர்.

தொழிற்சங்கம் வைக்க தொழிலாளர் உரிமைக்காகப் போராடிய இரண்டு பெண்கள் உட்பட பதினெட்டு பேர் துப்பாக்கி சூட்டில் உயிர் தியாகம் செய்து இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் உருவானது. இந்த சங்கம் எந்த கட்சியையும் சார்ந்தது கிடையாது. 

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் 1918 ஆம் ஆண்டு உருவாகிய இந்த சங்கத்திற்கு சர்க்கரை செட்டியார், செல்வபதி செட்டியார், ராமானுஜ நாயுடு ஆகிய மூவரும் ஆதரவாக இருந்தார்கள். ‘யங் இந்தியா’ என்கிற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்த அன்னிபெசன்ட் அம்மையார், பி.வி.வாடியா, திரு.வி.கல்யாணசுந்தரம், சிங்காரவேலர் போன்றவர்கள் சட்ட ரீதியாக உதவி செய்தார்கள்.
வட சென்னையில் உள்ள பல நிறுவனங்களில் பணியாற்றிய தொழிலாளர்களை இணைத்து, அந்த அமைப்பில் பி. அண்ட சி மில் தொழிலாளர்களும் இணைத்திருந்தனர். நூறு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அந்த அமைப்பில் முதல் முறையாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தோழர் எஸ்.நடராசன் பொதுச்செயலாளர் ஆனார்.

அவர் பொதுச்செயலாளர் ஆன பிறகே அவர் தாழ்த்தப்பட்டவர் என அறிந்தனர்.

தொழிலாளர்களுக்காகத் தொழிற்சங்கம் சார்பில் பல போராட்டங்களைக் கண்டவர் தோழர் எஸ்.நடராசன். அதற்காக கைதாகி ஒரு வாரம், பதினைந்து நாட்கள் என பல முறை சிறை சென்றிருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் அமைப்புக்கு வெகுஜன அமைப்பு தேவை என்கிற கருத்து இந்தியா முழுவதும் எழுந்தது. அதற்காக சென்னையில் கருத்தரங்கு நடத்துவது என்றும், தலைவராக நடராசன் செயல்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அந்தக் கருத்தரங்கில் தோழர் எஸ்.நடராசன் தலைவராகவும், விவசாய சங்கத்தை சேர்ந்த யூ.சி.நாராயணசாமி செயலாளராகவும், இந்திய – சீன நட்புறவுக் கழக்கத்தை சேர்ந்த ஆடிட்டர் சேஷாத்ரி பொருளாளராகவும் தேர்வு செய்து, பெரியார் திடலில் மிக பிரமாண்டமாக மாநாடு நடத்துவது என்றும், பெரியார் திடலில் இருந்து மெரீனா கடற்கரை வரை ஊர்வலமாக சென்று சீரணி அரங்கில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேறியது. 

பெரியார் திடலில் நடைபெற்ற மாநாட்டில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இடதுசாரி சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் அமைப்பின் வெகுஜன அமைப்புக்கு ‘தமிழக மக்கள் முன்னணி’ என்று பெயர் வைத்தனர்.

வழக்கறிஞர் குழு, விவசாயிகள் குழு, தொழிலாளர் குழு எனப் பல பிரிவுகளில் தொழிலாளர் அமைப்புகள் அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. பெரியார் திடலில் இருந்து மெரீனா கடற்கரைக்கு மிக பிரமாண்ட ஊர்வலமும், முடிவில் பொதுக்கூட்டமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பொதுக் கூட்டம் முடிந்து திரும்பிய இரண்டாயிரம் தோழர்களை தமிழக அரசு கைது செய்தது. அவர்களை வெளியே கொண்டுவர வழக்கறிஞர் குழு செயல்பட்டது.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் அமைப்பின் வெகுஜன அமைப்புக்கு ஆதரவளிக்கும் தோழர்களை ஒருங்கிணைக்க  1982 ஆம் ஆண்டு டில்லியில் ஒரு மாநாடு நடத்த கட்சி ஏற்பாடு செய்தது.

அந்த மாநாட்டில் தமிழக மக்கள் முன்னணி போன்று இந்தியா முழுவதும் இருக்கும் வெகுசன அமைப்புகளை இணைத்து அதற்கு இந்திய மக்கள் முன்னணி என்று பெயர் வைக்கப்பட்டது. தலைவராக பீகாரைச் சேர்ந்த ராஜாராம், துணைத் தலைவராக ஐ.பால்ராஜ், தமிழக தலைவராக எஸ்.நடராசன் ஆகியோர் தேர்வானார்கள்.

இலங்கையில் அமைதி திரும்ப இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற போது, இந்தியாவும் ராணுவத்தை அனுப்பியது. 

அப்போது, அதற்கு எதிரான ஒரு நிலைபாட்டை கட்சி எடுத்தது. இந்தியாவில் இருக்கிற தேசிய இனங்களைப் பாதுகாக்காத இந்திய ராணுவம், இலங்கையில் உள்ள தமிழ் தேசிய இனத்தை எப்படிப் பாதுகாக்கும் என்று கேள்வி எழுப்பியதுடன், ‘’முடிந்தால் தமிழ்த் தேசிய போராளிகளுக்கு ஆயுதம் வழங்கு... இல்லை என்றால் இந்தியாவுக்கு திரும்பிவிடு’’ என்று தோழர் எஸ்.நடராசன் தலைமையில் நூறு பேர் கன்னியாகுமரியில் இருந்து கவர்னர் மாளிகை வரை முற்றுகைப் போர்ப் பயணத்தை தொடங்கினர்

ஒவ்வொரு நாளும் முப்பது கிலோ மீட்டர் போர்ப் பயணம் என நாற்பத்தி இரண்டு நாட்களில் 150௦ கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் கண்டனர். வழி நெடுக மக்களைச் சந்தித்து ஈழப் பிரச்சினை குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, இரவு தங்குகிற கிராமங்களில் ஒவ்வொரு நாளும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது என்று பெரும் பிரச்சாரத்தை நடத்தினார்கள்.

விருதுநகரில் க.சுப்பு, மதுரையில் பழ.நெடுமாறன், சென்னையில் முரசொலி அடிகளார் என பலர் வரவேற்பு அளித்து பரப்புரை வழங்கினர். கவர்னர் மாளிகையில் நுழையும் போது அனைவரும் கைதாகினர்.

ஈழப் பிரச்சினைக்காக நடத்திய போராட்டத்தால் பி.அண்ட் சி மில்லில் தான் பார்த்து வந்த வேலையை இழந்தார் நடராசன். அதனை எதிர்த்து வழக்காடி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு ஆண்டுகளின் சம்பளத்துடன் வேலையையும் பெற்றார் நடராசன்.

அந்த நான்கு ஆண்டுகளில் இந்திய மக்கள் முன்னணி அமைப்பை பலபடுத்த பெரும் போராட்டங்களையும் சந்தித்தார் நடராசன்.

1990 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை கைவிடுவது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதில் இருந்தும் அந்த அமைப்பை ஆதரித்த வெகுஜன அமைப்புகளில் இருந்து பலர் வெளியேறினார்கள்.

பேராசிரியரும் கவிஞருமான இன்குலாப், டி.எஸ்.எஸ்.மணி, பிரான்சிஸ், பேராசிரியர் திருமாவளவன், முருகன், டாக்டர் சிவக்குமார் என பலருடன் இணைந்து இந்திய மக்கள் முன்னணி அமைப்பில் இருந்து தோழர் எஸ்.நடராசனும் வெளியேறினார்.

பிறகு, ராம்விலாஸ் பஸ்வான் துவங்கிய லோக் சன சக்தி அமைப்பின் தமிழக செயலாளர் பொறுப்பு தோழர் நடராசனுக்கு கிடைத்தது. அந்த அமைப்பின் செயல்பாடுகள் அவருக்கு ஒத்துவரவில்லை. அதனால், அந்த அமைப்பில் இருந்து விலகியவர், 1994–ல் பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

நிலத்தில் வேலை செய்யும் எங்களுக்கு நிலம் கிடையாது. படிப்பும் கிடையாது என்று 1891 ஆம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டரிடம் அயோத்திதாச பண்டிதரும், ரெட்டைமலை சீனிவாசனும் சேர்ந்து மனு கொடுத்துள்ளனர். 

அந்த மனு விக்டோரியா மகாராணியின் பார்வைக்குச் செல்கிறது. அவரது மேலான பரிசீலனையில் பஞ்சமர்களுக்காக பஞ்சமி நிலங்கள் தமிழகம் முழுவதும் பன்னிரண்டு லட்சம் ஏக்கர் ஒதுக்கப்பட்டன.

அப்படி ஒதுக்கப்பட்ட நிலங்களில் செங்கல்பட்டு அருகே உள்ள காரனைபாக்கம் கிராமத்தில் 650 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. தலித் அல்லாதவர்கள் பயன்படுத்த முடியாத அந்த நிலத்தை ஒரு வடநாட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு வீரபத்திரன் என்பவரின் மகன் தீபன் சக்கரவர்த்தி என்பவர் விற்பனை செய்து முன்பணம் பெற்றுள்ளார். 
 
இந்த தகவல் அறிந்த அந்தப் பகுதி தலித் மக்கள் பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மேலும் நடராசன் ஆலோசனையில் பஞ்சமி நிலத்தில் அம்பேத்கார் சிலை ஒன்றையும் வைத்துள்ளனர்.

அந்த சிலையை விஷமிகள் சிலர் உடைத்து விட்டதால், அவர்களைக் கைது செய்யக் கோரி செங்கல்பட்டு சப் கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் திரண்டனர்.

அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்கிற அச்சத்தில் கூட்டத்தை கலைக்க போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகிய இருவரும் குண்டுக்கு இரையாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகி திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டனர். பஞ்சமி நிலத்தை மீட்க முன் நின்று போராடிய மாமண்டூர் பாதிரியார் மார்ட்டின் அலுவலகம் மூடப்பட்டது.

அதன் பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரி கருப்பன் தலைவராகவும், என்.ஜி.ஒ. ஜெயகரன் ஜோசப் செயலாளராகவும், நடராசன் கொள்கைப்பரப்புச் செயலாளராகவும், ஆர்.கே.சாமிநாதன் அமைப்பு செயலாளராகவும் கொண்ட பஞ்சமி நிலம் மீட்பு அமைப்பு தொடங்கப்பட்டது.

பஞ்சமி நிலத்திற்காகப் போராட்டம் நடத்துவது, பஞ்சமி நிலத்தை மீட்பது, அம்பேத்கார் ஊர்தி பயணம் செல்வது, அதே இடத்தில் அம்பேத்கார் சிலை வைப்பது என்று பல போராட்ட வடிவங்களை கொண்டு அந்த அமைப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் இறங்கியது.

தி.நகர் பனகல் பூங்கா அருகில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் முப்பதாயிரம் பேர் கலந்து கொண்டனர். ராம்விலாஸ் பஸ்வான் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், செயலாளர் தலித் எழில்மலை ஆகியோரும் ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

அதன் பிறகு அம்பேத்கார் சிலை வைக்கச் சென்ற மக்களை செங்கல்பட்டு சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மறியல் போராட்டத்தைத் தொடர்ந்த மக்களைப் போலீசார் கைது செய்தனர்.

சிங்கப்பெருமாள்கோவில் கிராமத்தில் சாலை மறியல், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் முன்பும் மறியல் என தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். இதனால், பஞ்சமி நிலம் பற்றிய விழிப்புணர்வு நாடு முழுவதும் பரவியது. அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்ட அதே இடத்தில் அம்பேத்காரின் புதிய சிலை நிறுவப்பட்டது.

சாதி வெறி வன்முறைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் பல போராட்டங்களை நடத்திய எஸ்.நடராசன், 1995 ஆம் ஆண்டு கொடியங்குளத்தில் நடைபெற்ற சாதிய கலவரத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார். அப்போது புதிய தமிழகம் என்கிற அமைக்க உருவாக்க காரணமாகவும் இருந்தார். 

திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய தோழர் வள்ளிநாயகம் நட்பு கிடைக்க அவருடன் இணைந்து தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பேரவை என்கிற அமைப்பை தொடங்கி, அதன் மூலம் பல போராட்டங்களைச் சந்தித்து வந்தவர் தோழர் நடராசன்.

கட்டாய மதமாற்றச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் உள்ள அம்பேத்கார் மணிமண்டபத்தில் இருந்து விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி பயணம் தொடங்கிய தோழர் எஸ்.நடராசனையும், அவரது தோழர்களையும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.மகேந்திரன், கவிஞர் இன்குலாப் உட்பட பலர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். கன்னியாகுமரி வரை  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். 

சமூகப் போராளியாக தனது வாழ்க்கை முழுவதும் போராட்டக் களத்தில் நிற்கும் எஸ்.நடராசன், கோடம்பாக்கத்தில் தங்கி இருந்தபோது, தனக்கு பிடித்த  தோழி பானுமதி என்பவரை 1974 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

கல்யாண சுந்தரம் முதலியார் – மீனாட்சி அம்மாள் தம்பதிகளின் மகளான பானுமதி, தோழரின் பல போராட்டங்களுக்கு தனது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கி இருக்கிறார்.

“திருமணத்திற்குப் பிறகு நாற்பத்தி எட்டு ஆண்டுகள் என்னுடைய போராட்ட வாழ்க்கையில் பங்கெடுத்து எனது அமைப்புக்கும், குடும்பத்திற்கும் பெருமை சேர்த்தவர் எனது துணைவியார் பானுமதி” என்று கூறும் தோழர் நடராசன், “அவர் ஒத்துழைப்பு இல்லை என்றால் என்னால் உழைக்கும் மக்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியாது” என்கிறார்.

தோழர் நடராசன் – தோழர் பானுமதி தம்பதியினருக்கு கவிதா, காஞ்சனா, கல்பனா என்று மூன்று மகள்கள் பிறந்தனர்.

பி.எஸ்.சி. நியூட்ரீசியன் படித்த மூத்த மகள் கவிதாவை வடக்கன்குளம் பெஞ்சமின் – அன்னக்கிளி தம்பதியரின் மகன் வரதன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். வரதன் மருத்துவத் துறையில் வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு ஆகாஷ் ஆண்டனி, அவினாஷ் ஆண்டனி என்கிற இரு மகன்கள் உள்ளனர்.

எஞ்சினியர் படித்து மின்சாரத் துறையில் பணிபுரிந்து வரும் இரண்டாவது மகள் காஞ்சனாவை , திருவள்ளூர் சந்திரசேகரன் – ரோசிலின் வயலட் தம்பதியின் மகன் குணசேகரன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். குணசேகரன் பி.எஸ்.சி. அக்ரிகல்சர் படித்துள்ளார். இவர்களுக்கு பிளஸ்சி, நிஷா என்கிற இரு மகள்களும், மோனிஷ் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.

பி.பி.ஏ. படித்த மூன்றாவது மகள் கல்பனாவை பண்ருட்டி அருகே உள்ள பண்டகமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் கலியமூர்த்தி – பட்டம்மாள் தம்பதியின் மகன் ராஜா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். ராஜா விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவர்களுக்கு ஜனனி, தான்யாஸ்ரீ என இரு மகள்கள் உள்ளனர்.

மக்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்த ‘சமூகப் போராளி’ தோழர் எஸ்.நடராசன், தனது திருமணத்தையும், தனது மகள்களின் திருமணத்தையும் பெண்களின் விருப்படியே செய்துள்ளார்.

மாநில அளவில் நடைபெற்ற கபடி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் கைகளால் பரிசு பெற்றுள்ள நடராசன், பி.அண்ட் சி மில் தொழிலாளர்களின் கபடி விளையாட்டுக் குழு கேப்டனாகவும் இருந்துள்ளார்.

சாதி, மத அரசியலுக்கு எதிராக ஏராளமான போராட்டங்கள், கூட்டங்களில் பங்கெடுத்துள்ள ‘சமூகப் போராளி’ தோழர் எஸ்.நடராசன், இன்றும் அதே உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார்.

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கில்நகர் பூங்காவில் தினமும் நடைப் பயிற்சியில் ஈடுபடும் தோழர் எஸ்.நடராசன், பூங்காவைப் பராமரிக்க நடையாளர் சங்கம் என்கிற அமைப்பை உருவாக்கக் காரணமாகவும் இருந்திருக்கிறார்.  அவருடைய வழி காட்டுதலும், ஆலோசனைகளும் அந்த சங்கத்திற்கும், பூங்காவிற்கும் பெரும் துணையாக இருந்துள்ளன.

அதிகமாக எதற்கும் ஆசைப்படாத குணமுடையவர் இவர், அதனால்தான் இவரது வாழ்க்கை இன்றுவரை ஆனந்தமாக இருக்கிறது.