திரு சுடலைமுத்து பாண்டியன் |
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள
பன்னீர்குளம் கிராமத்தை சேர்ந்த சண்முகத்தேவர் - சுப்பம்மாள் தம்பதியருக்கு 1947
ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி மகனாகப் பிறந்தவர், சுடலைமுத்து பாண்டியன்.
இவருடன் பத்துப்பேர் பிறந்தனர். சிவபாண்டியன்
என்கிற தம்பியும், பொன்னுத்தாய், குருவம்மாள், அங்கம்மாள், வேலம்மாள் ஆகிய நான்கு
சகோதரிகள் மட்டுமே தங்கினர்.
அந்தக் காலத்தில் மருத்துவ வசதிகள் இல்லாத
காரணத்தால், அந்த நான்கு பேர்களும் இந்த பூமியில் தங்கவில்லையாம். ‘’நீங்களெல்லாம்
தப்பிப் பிழைத்தவர்கள்’’ என்று இவர்களைப் பற்றி தாயார் சுப்பம்மாள் பெருமையாகக் கூறுவாராம்.
கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் கழக
உயர்நிலைப் பள்ளியில் பழைய எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்த சுடலைமுத்து
பாண்டியன், தனது பதினேழாவது வயதில் காவல்துறையில் சேர்ந்தார்.
1965 ஆண்டு முதல் இரண்டரை ஆண்டுகள்
பாளையங்கோட்டையில் காவலராக பணியாற்றிய சுடலைமுத்து பாண்டியன், அதன் பிறகு
சென்னையில் சிறிது காலம் ஆயுதப்படையிலும், காவல் துறையின் தொலைபேசி
இணைப்பகத்திலும் பணியாற்றினார்.
மனைவி மற்றும் பெற்றோருடன் சுடலைமுத்து பாண்டியன் |
இயற்கையிலேயே போராட்டக் குணம் நிறைந்த
சுடலைமுத்து பாண்டியன், 1979 ஆம் ஆண்டு போலீஸ் போராட்டம் தொடங்கிய போது, அதில் முக்கிய பங்குவகிக்க
வேண்டிய நிலைக்கு ஆளானார். காரணம், அனைத்து போலீஸ் நிலையத்தையும் இணைக்கும்
தொலைபேசி இணைப்பகம் அவர் வசமாக இருந்தது.
லஞ்சம் வாங்க போக மாட்டோம், பொய் கேஸ்
போடுவதற்கு உதவ மாட்டோம், பணக்காரர்கள், பண்ணையார்களின் அநியாயத்திற்குத் துணை
போகமாட்டோம், உழைக்கும் மக்களுக்கு நேர்மையாக இருப்போம், உயர் அதிகாரிகள்
வீட்டிற்கு டிரைவராகவும், உதவியாளராகவும் வேலை செய்ய மாட்டோம் என்று பல போலீசார்
கம்பீரமாக இருந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன்.... |
போலீசார் சங்கம் வைத்தால் தங்களுக்கு
எதிராக இருப்பார்கள் என்று எண்ணிய உயர் போலீஸ் அதிகாரிகள், உளவுத்துறையினரை வைத்து
சங்கம் அமைக்க முடியாத வகையிலும், எம்.ஜி.ஆருக்கு எதிராக போலீசார் இருப்பது போன்ற
சூழ்நிலையை உருவாக்கவும் முயன்றுள்ளனர்.
உளவுத்துறையின் செயலால், நாடு முழுவதும்
போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி கோரிப் போராட்டங்கள் எழுந்தன. அதில் முக்கியமான
நபர்களில் ஒருவராக இருந்து சுடலைமுத்து பாண்டியனும் செயல்பட்டிருக்கிறார். இதனால்,
அவருக்கு காவல்துறையில் வேலை பறிபோனது. அந்த விவரங்களைப் போலீஸ் போராட்டம் என்கிற
தனி நூலாக எழுதி உள்ளார், திரு சுடலைமுத்து பாண்டியன்.
போலீஸ் போராட்டத்தின் போது பத்திரிகையாளர்
சோலை அவர்களுடன் நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பை பெற்ற சுடலைமுத்துப் பாண்டியன்,
சோலை அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றிய ‘மக்கள் செய்தி’ பத்திரிகையில் சில காலம் துணை
ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.
போலீஸ் போராட்டத்தின் போது சோலை அவர்கள்
செய்த உதவியை நன்றியோடு குறிப்பிடும் சுடலைமுத்து பாண்டியன், திரு சோலை அவர்கள்
மூலமாக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரைச் சந்திக்கிற வாய்ப்பை பலமுறை
பெற்றுள்ளார். அதுவும் ஒரு போராட்ட வீரனாக....
போலீஸ் சங்கம் தொடங்கப் போராட்டம்,
போலீசாருக்காக எம்.ஜி.ஆரிடம் சென்று பேசுதல், எம்.ஜி.ஆரின் உதவியைப் பெற்று வேலை
இழந்த சக போலீசார் குடும்பத்துக்கு உதவுவது என்று பல சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆர்
அவர்களை நேரில் சந்தித்திருக்கிறார்.
இளம் வயதில் சுடலைமுத்து பாண்டியன் |
உண்மைக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம்
கொடுக்கும் சுடலைமுத்து பாண்டியன், போலீஸ் வேலையில் சேர்கிற வாய்ப்பை மீண்டும்
பெறுகிறார்.
1971 முதல் 1979 வரை
காவல்துறை தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றியவர், போராட்டக் காலங்களுக்குப் பிறகு
மீண்டும் 1980 முதல் 1986 வரை அண்ணாசாலை காவல்
நிலையத்திலும், ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்திலும் தலைமைக் காவலாரக பணியாற்றி உள்ளார்.
ஆரம்பத்தில் சூளைமேடு பகுதியில் உள்ள பஜனைகோவில்
தெருவில் வசித்த சுடலைமுத்து பாண்டியன், அதன் பிறகு 1975 ஆம்
ஆண்டு... இப்போது இருக்கும் சுப்பாராவ் நகர் பகுதிக்கு செல்கிறார். இங்கு
சுப்பாராவ் நகரை நிறுவி அதற்கு நிறுவன தலைவராகச் செயலாற்றி வருகிறார்.
சுப்பாராவ் நகரில் ஏழை மக்கள் நூற்றி
ஐம்பது பேருக்கும் மேல் குடியிருக்க இடம் அளித்துள்ளார். இதில் தொழிற்சங்கத் தலைவர்கள்
ஏழு பேருக்கு இடம் அளித்ததுள்ளார்.
சுப்பாராவ் நகருக்கு அவர் சென்ற போது நிறைய
பிரச்சினைகளும் அவரை எதிர்கொண்டிருந்தன. வழிகள் கிடையாது. கால்வாய்ப் பிரச்சினை
என்று தினம் ஒரு பிரச்சினை தோன்றியது. அவற்றைச் சரி செய்ய பெரிய போராட்டங்களை அவர்
நடத்த வேண்டி இருந்தது.
ஏழாண்டுகள் காவல் துறைக்கான போராட்டத்தைச் சந்தித்தவர்,
இங்கும் ஏராளமான போராட்டங்களைப் பத்தாண்டுக்கும் மேல் சந்தித்தார். பங்கெடுத்த
போராட்டங்களில் எல்லாம் வெற்றியை கண்டவர், தன்னால் பல வெற்றியாளர்களை உருவாக்க
முடியும் என்று ஒருநாள் கனவு கண்டார்.
அதனால், காவல் துறையில் இருந்து 1986 ஆம்
ஆண்டு விருப்ப ஓய்வு.பெற்று, கல்வி நிறுவனம் தொடங்கினார். விநாயகா வித்யாலயா என்கிற
பெயரில் காந்தி சாலையில் தொடங்கிய அந்தப் பள்ளி, பல மாணவ, மாணவிகளை உயர்ந்த
நிலைக்குச் செல்ல பாதை அமைத்துக் கொடுத்தது.
1991ல் மதுரவாவயல்
பகுதியில் உள்ள லட்சுமி நகரில் தனது சகோதரியின் பெயரில் வேலம்மாள் நினைவு மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியைத் தொடங்கினார். பிறகு 1992ல்
மதுரவாயல் ஸ்ரீலட்சுமி நகரில் வேலம்மாள் வித்யோதயாஸ்ரம் மெட்ரிக் பள்ளியை தொடங்கினார்.
1995ல் மதுரவாயல்
கணபதி நகரில் வேலம்மாள் வித்யோதயா நர்சரி அண்ட் பிரைமரி ஸ்கூல் துவங்கியவர்,
திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் பகுதியில் வேலம்மாள் அகடமி
மெட்ரிக் பள்ளியையும் 2012ல் தொடங்கினார்.
2017ல் பட்டாபிராம் அருகே உள்ள
சோராஞ்சேரியில் ஸ்ரீகுரு அக்காசாமி வேலம்மாள் மெட்ரிக் பள்ளியை தொடங்கி, அங்கும்
தனது கல்வி பணியை தொடர்கிறார். இவரது கல்வி நிறுவனங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட
ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
தாய் இல்லாத, தந்தை இல்லாத மாணவ மாணவிகள் இலவசமாக
கல்வி பெற உதவுகிறார். தொடந்து முப்பது ஆண்டுகள் இவரிடம் நூற்றுக்கும் அதிகமான
மாணவ மாணவிகள் இலவசக் கல்வி பெற்றுள்ளனர். கட்டணம் கட்டவில்லை என்று எந்த மாணவ,
மாணவியையும் இவரது கல்வி நிறுவனம் திருப்பி அனுப்பியது கிடையாது.
குறைந்த கட்டணம், தரமான கல்வி என்று இயங்கும்
திரு சுடலைமுத்து பாண்டியன், சிறு வேலையாக இருந்தாலும் அதில் சமூக நோக்கு இருக்க
வேண்டும் என்று விரும்புகிறவர். இவரது கல்வி நிறுவனத்தில் அதிகமான தலித்
மக்களுக்கு வேலை வழங்கி உள்ளார்.
அவரது கல்வி நிறுவனங்கள் மூலம் பல
சாதனையாளர்கள் உருவாகி உயர்ந்து ஒளிர்கின்றனர்.
கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி
கிராமத்தை சேர்ந்த சுடலைமுத்து தேவர் – பேச்சியம்மாள் தம்பதியின் மகள் செண்பகவல்லி
என்பவரை 1963 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06 ஆம் தேதி இவர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ராஜா முத்துப்பாண்டியன் என்கிற
மகனும், காந்திமதி, சௌதாமணி என்கிற இரு மகள்களும் பிறந்தனர்.
தனது மகன் ராஜா முத்துப்பாண்டியன்
வழக்கறிஞர் படிப்பை முடித்த போது, தனது மைத்துனர் முருகையா – ராமலட்சுமியின் மகள்
முருகலட்சுமியைத் திருமணம் செய்து வைத்துள்ளார். முருகலட்சுமி எம்.எஸ்.சி.,
எம்.எட்., எம்.பில். படித்துள்ளார்.
ராஜா முத்துப்பாண்டியன் - முருகலட்சுமி
தம்பதினருக்கு சௌந்தர்ய லட்சுமி என்கிற மகளும், விஜய பிரபாகரன் என்கிற மகனும்
உள்ளனர். சௌந்தர்ய லட்சுமி பன்னிரண்டாம் வகுப்பும், விஜய பிரபாகரன் ஆறாம்
வகுப்பும் படித்து வருகின்றனர்.
எம்.ஏ. பிஎட் படித்துள்ள மூத்தமகள்
காந்திமதியை, கோவில்பட்டி சண்முகய்யா – செண்பகம் தம்பதியின் மகன் காந்தி
சுப்பிரமணியம் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு
கார்த்திக் சண்முகம் என்கிற மகனும், ஐஸ்வர்யா என்கிற மகளும் பிறந்தனர்.
.
பி.காம். படித்துள்ள கார்த்திக் சண்முகம்,
கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். தற்போது பர்ஸ்ட் டிவிஷன் பிளேயராக
களத்தில் விளையாடி வருகிறார். ஐஸ்வர்யா, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இரண்டாவது மகள் சௌதாமணியைத் தனது சகோதரி
குருவம்மாள் – திருச்சிற்றம்பலம் மகனும், எம்.ஏ.பிஎட் பட்டதாரியுமான பாரத்குமார்
என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு குருஅருள் செல்வி
என்கிற ஒரு மகள் இருக்கிறார். அவர், தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஒரு போலீசாக வாழ்க்கையைத் தொடங்கிய
சுடலைமுத்து பாண்டியன், ஒரு கல்வியாளராகவும் இப்போது உயர்ந்து நிற்கிறார். அவரது
சாதனைகளை, உதவிகளைப் பற்றி எழுதினால் குறைந்தது ஐந்து புத்தகங்கள் வெளியிட
வேண்டும். அந்தளவுக்கு செய்திகள் ஏராளமாக எனக்குள் குவிந்து கிடக்கின்றன.
ஆனால், அப்படித் தன்னைப் பற்றி எழுதுவதை
அவர் விரும்பவில்லை. காலம் என்ன இட்டுச் செல்கிறதோ, அந்த வேலைகளைச் செய்து கொண்டு
போகிறேன் என்பார்.
தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து கொள்ளும்
சுடலைமுத்து பாண்டியன், எப்போது தூங்குவார் என்பது அவருக்கே தெரியாது. அவருக்கு
தெரிந்தது எல்லாம் உழைப்பு மட்டுமே.
சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க
மாட்டார். வேலைகளில் மட்டுமே அவரது மனம் சுற்றிக் கொண்டு இருக்கும். ஞாயிறு
விடுமுறை என்று வீட்டில் ஓய்வெடுக்க மாட்டார். வழக்கம் போல தனது கல்வி
நிலையங்களுக்குச் சென்று விடுவார்.
ஒவ்வொரு நாளும் இன்று என்ன வேலைகள் இருக்கின்றன,
அதில் யாருக்காவது உதவுகிற வாய்ப்பு இருக்கிறதா என்று சமூக நோக்குடனே
சிந்திப்பார்.
பொது மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க,
பொறுப்பாக இருந்து பாடுபட்டிருக்கிறார். அதே போல பலருக்கு கஷ்ட நேரத்தில் கை
கொடுத்து உதவிகள் வழங்கி இருக்கிறார். அந்த உதவிகளை வெளியில் வெளிபடுத்திக் கொள்வது
கிடையாது.
வீட்டின் அருகில் அருள்மிகு நவசக்தி
விநாயகர் ஆலயத்தை எழுப்பி, அந்த ஆலயத்தின் நிறுவனராக இருக்கிறார். அந்த கோவிலின்
விழாக்களில் பொதுமக்களில் ஒருவராக கலந்து கொள்வாரே தவிர, என்றுமே தன்னை முன்னிலைப்
படுத்திக் கொள்ளமாட்டார்.
‘’நான் யோக்கியன்... . சாதுன்னு நினைச்சிடாதிய...
வம்புன்னா வம்புதான்’’ என்று ஆத்திரப்படும் போது அதிரவைக்கும் சுடலைமுத்து
பாண்டியன், பல பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.
எத்தனை வெற்றிகள்
வந்து அவரது புகழையும், வருமானத்தையும்
உயர்த்தினாலும் எளிமையான மனிதராக அனைவரிடத்திலும் அன்பு காட்டிப் பழகக் கூடிய
அற்புதமான மனிதர் இவர்.
- ஜி.பாலன்
No comments:
Post a Comment