Monday, April 22, 2019

‘காவல்துறை அதிகாரி’ அல்போன்ஸ்

'போலீஸ் அதிகாரி' அல்போன்ஸ் 
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நாட்டுக்கான சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் ராணுவப் படையில் இருந்த வீரர்களில் ஒருவர் சந்தானசாமி. அவருடைய மகன்தான், நமது அல்போன்ஸ்.

கும்பகோணம் நாச்சியார்கோவில் அருகே உள்ள கோவனூர் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி சந்தானசாமி – சின்னம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் அல்போன்ஸ். இவருக்கு ஆனந்தம், பொன்னுமணி, மரியம்மாள், அன்னம்மாள், ராணி, லூர்துமேரி என ஆறு சகோதரிகள். இதில் அன்னம்மாள் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு பத்து வயதில் காலமாகிவிட்டார்.

கோவனூர் பஞ்சாயத்து பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த அல்போன்ஸ், ஆறாம் வகுப்பு முதல் நாச்சியார்கோவிலில் உள்ள நடுநிலைப்பள்ளியில் படித்தார். ஏழாம் வகுப்பில் வெற்றி அடைந்த போது, அவரது தந்தை ஒரு வழக்கில் சிக்கிச் சிறை செல்ல நேர்ந்தது. அதனால், குடும்ப கஷ்டம் இவரை படிப்பைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளியது.

குடும்பத்தின் கஷ்டத்தை போக்க கூலி வேலைக்கு சென்றார். தலையாரி வேலைதான் என்றாலும் வருமானம் போதவில்லை. வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து புத்திமதிகளையும் வறுமை அவருக்கு அப்போது கற்றுக் கொடுத்தது.

மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அல்போன்ஸ் 
நீதி, நேர்மை, நியாயம், உழைப்பு, சேமிப்பு, முன்னேற்றம் என வெளியுலகம் பற்றிய புரிதல் அவருக்குள் வந்தன.

இதே கூலி வேலையில் தொடர்ந்து இருந்தால் கடைசிவரை கூலிக்காரனாகவே வாழ வேண்டும். படித்தால் முன்னேற்றம் அடையலாம் என்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கியது. இதனால், தனது சித்தப்பா பன்னீர்செல்வம் என்பவரிடம் சென்று தனது எண்ணத்தைத் தெரிவித்தார்.

அவர், இவரை அழைத்துச் சென்று மீண்டும் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எட்டாம் வகுப்பில் மீண்டும் சேர்ந்த அல்போன்ஸ், படிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்தினார். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மாணவனாகப் பாராட்டு பெற்றார்.

‘’படிக்கிற பசங்க படிக்கப் பயந்து மாடு மேய்க்க போகுது. இவன் மாடு மேய்த்துவிட்டு படிக்க வந்திருக்கிறான். எங்கே தேறப் போகிறது’’ என்று கணக்கு போட்ட தலைமை ஆசிரியர் சுந்தரம்பாளின் எண்ணத்தைப் பொய்யாக்கினார் அல்போன்ஸ். 

அவரது படிப்பு ஆர்வத்திற்குத் தலைமை ஆசிரியர் சுந்தரம்பாள், சக மாணவன் கலியபெருமாள் ஆகியோர் தூண்டுகோலாக இருந்தார்களாம்.

தினமும் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று நாச்சியார்கோவில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த அல்போன்ஸ், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்று திறமையான பையன் என்கிற பாராட்டில் நனைந்தார். 

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய பதினாறு பேரில் இவர் மட்டுமே தேர்வானவர் என்பதால் சுற்றுவட்டாரத்தில் இவருக்கு நிறைய மரியாதைகள் கிடைத்தன.

கல்லூரிக்குச் செல்ல வசதி இல்லை என்பதால் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது.

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது திரைப்படங்கள் பார்க்கின்ற வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. அதில் போலீஸ் கதைகள் அவரை வெகுவாக கவர்ந்துள்ளன.

பல குடும்பங்கள் நாசமாகக் காரணமாக இருக்கும் சாராயம் விற்பவர்களை அடித்துச் சிறையில் போடவும், திருடர்களைக் கைது செய்து மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும், அநியாயம் செய்பவர்களை, அக்கிரமக்காரர்களை  அடித்து உதைக்கவும், திருத்தவும் போலீஸ் வேலைதான் சரியானது என்று மனதில் கணக்கு போட்டார்.

அடி மனதில் பதிந்த அந்த போலீஸ் கனவு, அடிக்கடி நினைவுக்கு வந்து ஞாபகப்படுத்தின. ஆனால், குடும்பக் கஷ்டம் அவரை வேலைக்கு அனுப்பியது. கொத்தனார் வேலை, வயல்வேலை என்று தினம் கிடைக்கிற வேலைகளைச் செய்து குடும்பத்தின் வறுமையைப் போக்கக் காரணமாக இருந்திருக்கிறார்.

நாளைக்கு எங்கு வேலை என்று கேட்டு தெரிந்து கொண்ட பின்னரே இரவு படுக்கைக்குச் செல்வாராம். அந்தளவுக்கு வேலையின் மீதும், குடும்பத்தின் மீதும் அல்போன்ஸ் கவனம் செலுத்தி இருக்கிறார்.

ஒரு நாள் தபால் துறையில் வேலை செய்கிற வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. போலீஸ் வேலையை மனதில் வைத்துக் கொண்டு போஸ்ட்மேன் வேலையைப் பார்க்க முடியது என்று மனம் சொல்லியாது. அதனால், அந்த வேலையை நண்பன் பார்த்திபனுக்குச் சொல்லி இருக்கிறார். அந்த வேலை பார்த்திபனுக்குக் கிடைத்துள்ளது.

தஞ்சாவூரில் போலீஸ் வேலைக்கு ஆட்கள் எடுப்பதை தெரிந்து கொண்ட அல்போன்ஸ், அங்கு சென்று முயற்சி செய்துள்ளார். போலீசார் வைத்த அத்தனை டெஸ்ட்டிலும் பாஸ். ஆனாலும் வேலைக்கான ஆர்டர் வரவில்லை.

1969 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட தனக்கு 1970 ஆம் ஆண்டு முடியப் போகிறது. அதுவரை ஆர்டர் வரவில்லை என்று ஆத்திரத்துடன் ஒரு கடிதம் வரைந்தார் அல்போன்ஸ்.

போலீஸ் வேலை கொடுங்கள். இல்லை என்றால் எனது சான்றிதழை திரும்பக்கொடுங்கள் என்று அப்போது தஞ்சாவூரில் எஸ்.பி.யாக இருந்த தேவாரத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

அதன் பிறகு சென்னைக்குச் சென்று போலீஸ் வேலைக்கு முயற்சி செய்வது என்று முடிவு செய்துள்ளார். தனது தந்தையின் நண்பருடைய மருமகன் ஜெயராமன் சென்னையில் போலீஸ் வேலையில் இருப்பது அவருக்குத் தெரிந்த தகவல். அதனால், அவர் மூலமாக முயற்சி செய்வது என்கிற நம்பிக்கையுடன் சென்னைக்கு சென்றார். 

சென்னையில் ஜெயராமனின் முகவரியை கண்டுபிடிக்கவே ஒருவாரம் அவருக்குத் தேவைப்பட்டது. கையில் காசு இல்லாமல் சாப்பிட முடியாத நிலை உண்டானது. பசிக் கொடுமை தாங்க முடியாமல் குழாய் தண்ணீரைக் குடித்து, பனகல் பூங்காவில் உறங்கி வாழ்ந்திருக்கிறார்.

உடனே போலீஸ் வேலை கிடைக்காது. அதற்கான வாய்ப்பு வரும் வரை ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியில் வேலை செய்துகொள் என்று அவருக்கு ஒரு வேலையை நாகராஜ் என்பவர் வாங்கிக் கொடுத்துள்ளார்.

வேஷ்டி கூடாது. பேண்ட் அணியவேண்டும். செருப்பு அணிந்துதான் வரவேண்டுமென்று அங்கு பணித்தார்கள். அதனால், அவருக்கு அழுகையே வந்துவிட்டதாம். கையில் பணம் இல்லாமல் அவற்றை எப்படி பெற முடியும்?.

சூழ்நிலையை அறிந்து அல்போன்ஸ்க்கு உதவியுள்ளார் நாகராஜ். ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியில் நான்கு மாதங்கள் தினசரி கூலிக்கு வேலை செய்துள்ளார்.

போலீஸ் வேலைக்கு ஆள் எடுப்பதை ஜெயராமன் மூலம் அறிந்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அல்போன்ஸ் ஓடி இருக்கிறார். அன்று இருநூறு பேர் பங்கேற்றுள்ளனர். அனைத்து பரிசோதனைகளும் முடிந்து எண்பது பேர் தேர்வானார்கள். அதில் அல்போன்ஸும் தேர்வானார்.

ஆர்டர் வருவதற்குள் வீட்டுக்குச் சென்று வரவேண்டும் என்று முடிவு செய்த அல்போன்ஸ், ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனிக்குச் சென்று விடுமுறை எழுதி கொடுத்துவிட்டு சொந்த கிராமத்திற்கு சென்றார். 
  
முதலில் சென்ரல் ரிசர்வ் போலீஸ் வேலையில் சேர ஆர்டர் வந்தது. அந்தக் கடிதத்தை ஜெயராமனிடம் காட்டிய போது, சிட்டி போலீசுக்குப் போகலாம் என்று காத்திருக்க வைத்திருக்கிறார்.

1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி சிட்டி போலீஸ் வேலை ஆர்டர் வந்தது. எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சி. ஆனால் கையில் பணம் இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் நண்பர் லட்சுமணனைச் சந்திக்க சென்றார்.

திருமண மகிழ்ச்சியில் இருந்த லட்சுமணன், அல்போன்ஸ் தெரிவித்த செய்தியைக் கேட்டு மேலும் மகிழ்ச்சிக்கு ஆளானதுடன், மணமகனாகக் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் போது தனக்கு அன்பளிப்பாக வழங்கிய பணத்தை எடுத்து அல்போன்சுக்கு கொடுத்து உதவி இருக்கிறார்.

நண்பன் லட்சுமணன் கொடுத்த இருபத்தி ஐந்து ரூபாய் பணத்துடன் சென்னை சென்ற அல்போன்ஸ், ஒன்பது மாதங்கள் பயிற்சி, பந்தோபஸ்து என்று காலத்தைக் கடந்திருக்கிறார். சட்டங்கள் குறித்து சப் இன்ஸ்பெக்டர் பிர்லாபோஸ் என்பவரிடம் கற்றிருக்கிறார்.

எஸ்.எஸ்.எல்.சியில் தேர்வு பெற்றிருந்ததால், கமிஷனர் அலுவலகத்தில்  முதலில் வேலை கிடைத்தது. அதன் பிறகு 1974 ஆம் ஆண்டு ஆயுதப்படையிலும், 1978 ஆம் ஆண்டு மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்திலும் பணி அமர்த்தப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவுப் பணிக்குச் சென்றார். அதன் பிறகு அண்ணாசாலை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியமர்த்தப்பட்டார்.

1985 ஆம் ஆண்டு முதல்நிலை காவலர் என்கிற ‘கிரேடு ஒன்’ பதவி உயர்வு இவருக்குக் கிடைத்தது. 1986 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த அல்போன்ஸ், 1990 ஆம் ஆண்டு சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்திற்கு சென்றார். 1995 ஆம் ஆண்டு அவருக்குத் தலைமை காவலர் பதவி உயர்வு கிடைத்தது.

எழும்பூர் காவல் நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர், அதன் பிறகு மீண்டும் சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்திற்குச் சென்றார். 2003 ஆம் ஆண்டு அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி கிடைத்தது.

அதன் பிறகு டி.ஜி.பி. அலுவலகத்தில் கண்ரோல் ரூம் பணிக்குச் சென்றவர் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்றார்.

பணியில் இருக்கும் போது செல்வாக்கு உள்ள சில ரவுடிகளை துணிச்சலாகக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். அதற்காக ஒரு புறம் பாராட்டும், மறுபுறம் மிரட்டலையும் சந்தித்திருக்கிறார்.

பாட்டி செபஸ்டியம்மாள் கேட்டுக் கொண்டது போல போலீஸ் வேலைக்குச் சென்ற பிறகு தனது சித்தப்பா மகன்கள் மூன்று பேரையும் போலீஸ் வேலையில் சேரவும் காரணமாக இருந்திருக்கிறார். தனது மைத்துனர்  போலீஸ் வேலையில் சேர காரணமாக இருந்திக்கிறார்.

போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் போது, இவருக்குத் திருமணம் செய்து வைக்க இவரது சித்தப்பா பன்னீர்செல்வம் முயற்சி செய்துள்ளார். தனக்கு போலீஸ் வேலை முதலில் கிடைக்க வேண்டும். தனது சகோதரிகள் திருமணம் நடைபெற வேண்டும். அதன் பிறகுதான் தனது திருமணம் என்று பிடிவாதம் கட்டி இருக்கிறார்.  

அதனால், அவரது அத்தை மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை.

தனது சகோதரிகளை பண்டாரவாடை, மாத்தூர், கும்பகோணம், வீரராகவபுரம், காசாகுடி ஆகிய இடங்களில் திருமணம் செய்து கொடுத்துள்ள அல்போன்ஸ் தனது திருமணத்துடன் சேர்த்து பதிமூன்று திருமணங்கள் தனது குடும்பத்தில் நிகழக் காரணமாக இருந்திருக்கிறார்.

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பிராஜா – மரியநட்சத்திரம் தம்பதியின் மகள் அடைக்கலமேரி என்பவரை 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் அல்போன்ஸ். இவர்களுக்கு ஆரோக்கிய சந்தான ஜீசஸ் மேரி, மரியகிரேட் சில்வியா என்கிற இரு மகள்களும், அலெக்சாண்டர் என்கிற ஒரு மகனும் பிறந்தனர்.

பி.பி.ஏ. படித்த மூத்த மகள் ஆரோக்கிய சந்தான ஜீசஸ் மேரியை, நாச்சியார்கோவில் அருகே உள்ள மாத்தூர் ஜெகநாதன் – அந்தோணியம்மாள் தம்பதியின் மகன் தாமஸ் துரைராஜ் என்பவருக்கு 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு நித்திய அல்போன்சா என்கிற மகள் இருக்கிறார்.

பி.எஸ்.சி. படித்த இரண்டாவது மகள் மரியகிரேட் சில்வியாவை, திருவள்ளூர் எஸ்.அந்தோணி - அந்தோணியம்மாள் தம்பதியின் மகன் ஜான் கென்னடி என்பவருக்கு 2௦௦3 ஆண்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்குக் கேத்தரின் கென்னடி, லீனா கென்னடி என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இப்போது பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

பி.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி படித்துள்ள மகன் அலெக்சாண்டருக்கு, பாண்டிச்சேரி ஸ்டாலின் ஜோசப் – மேரி தம்பதியின் மகள் பிபியானா என்பவரைத் திருமணம் செய்து வைத்துள்ளார். பிபியானா பி.டெக் படித்தவர். இவர்களுக்கு கிறிஸ்டியானா, டேனிலா என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இப்போது கத்தார் நாட்டில் வசித்து வருகிறார்கள்.

காவலர் பணியில் இருந்த போது நரியங்காடு, புதுப்பேட்டை, ஆயிரம்விளக்கு போன்ற காவலர் குடியிருப்புகளில் குடும்பத்துடன் வாழ்ந்த அல்போன்ஸ், 1998 ஆம் ஆண்டு சூளைமேடு பகுதியில் உள்ள முத்துலாண்டி காலனி பகுதியில் சொந்தமாக இடம் வாங்கிக் குடியேறினார்.

நேதாஜி படையில் வீரராக இருந்த காரணத்திற்காக தனது தந்தைக்கு வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை, இப்போது மூன்று ஏக்கர் நிலமாக உயர்த்தி, அங்கு தென்னை, தேக்கு, பலா போன்ற மரங்களையும், கொய்யா, நெல்லி போன்ற செடிகளையும் கொண்ட தோப்பாக உருவாக்கி வைத்திருக்கும், அல்போன்ஸ், விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்கிறார்.

தனது பாட்டனார் மலையப்ப படையாச்சி, பாட்டி செபஸ்டியம்மாள், தந்தை சந்தானசாமி, தந்தையின் மூத்தமனைவி ஜெயம், தனது தாயார் சின்னம்மாள் ஆகியோரின் நினைவு நாளில் கிராமத்திற்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அல்போன்ஸ், காவல் துறையில் பணிபுரியும் போது நேர்மை, கடமை என்று மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. 

தன் வாழ்வுக்கு பாட்டி சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் பொன்மொழியாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்ததால், தன்னுடைய பணிக் காலத்தில் எந்தவிதமான பனிஷ்மென்ட்க்கும் ஆளாகாமல் நல்ல செயலுக்காக ஐம்பத்தி இரண்டு வெகுமதிகளைப் பெற்றுள்ளார்.

நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும் என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளதால் எல்லோராலும் விரும்பப்படும் நல்ல நண்பராக அல்போன்ஸ் இருக்கிறார்.

No comments:

Post a Comment