'தளபதி' பிரேம்குமார். |
எங்கள் நட்பு வட்டத்தில் எல்லோராலும் தளபதி
என்று அன்புடன் அழைக்கப்படுபவர், நண்பர் பிரேம்குமார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த
ஸ்ரீராமுலு – தரணிதேவி தம்பதிக்கு லீலாவதி, கௌசல்யா என இரு மகள்களும்,
நரேந்திரபாபு, பிரேம்குமார் என இரு மகன்களும் பிறந்தனர்.
ராணுவத்தில் இருந்த ஸ்ரீராமுலு, டெல்லி,
சென்னை, தூத்துக்குடி என்று பல துறைமுகங்களில் பணியாற்றியவர். தமிழகத் துறைமுக அதிகாரியாக
அவர் இருந்த போது சென்னையை அடுத்த தாம்பரத்தில் வீடு கட்டிக் குடியேறினார்.
அங்கு 1961 ஆம் ஆண்டு பிறந்தவர்
பிரேம்குமார். தாம்பரம் சேவாசதன் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த
பிரேம்குமார், அதன் பிறகு பல்லாவரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ
முடித்தார். அமிஞ்சிகரையில் உள்ள பச்சையப்பன்
கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தவர், அதன் பிறகு அரசு வேலைக்கு முயற்சி
செய்தார்.
அரசு வேலை உடனடியாக கிடைக்கவில்லை. ஒருநாள்
தனது தந்தையைப் பார்க்க துறைமுகத்திற்கு சென்ற போது, பாரிமுனையில் உள்ள ஷிப்பிங்
சர்வீஸ் நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலை தேவை என்பதை அறிந்தார். அரசு வேலைக்கு
முயற்சி செய்வது ஒரு புறம் இருந்தாலும், கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள
வேண்டும் என்று நினைத்து அந்த நிறுவனத்தில் சேர்ந்தார்.
விழா ஒன்றில் பரிசு கேடயம் பெறுகிறார் பிரேம்குமார் |
அது ஒரு லாரி புக்கிங் ஆபீஸ். அங்கு லாரி
புக்கிங் கிளார்க் வேலை பிரேம்குமாருக்குக் கிடைத்தது. மேலாளர் பிரகாஷ், இவரது
திறமையை மேலும் உயர்த்தக் காரணமாக இருந்தார். தன்னை மேம்படுத்திக் கொள்ள நிறைய
விஷயங்களை அங்கு பிரேம்குமார் கற்றுக் கொண்டார். தொலைபேசி தொடர்புகள், பேச்சுத் திறமைகள்
அவருக்குக் கை கொடுத்தன.
அந்த வேலை.... நிறுவனத்திற்கு மட்டுமல்ல,
பிரேம்குமாருக்கும் அதிகம் பிடித்துப் போனது.
நிறைய நிறுவனங்களுடன் தொடர்பு. உள்நாடு –
வெளிநாடு, ஏற்றுமதி - இறக்குமதி என 1985 முதல் 1991 வரை
காலம் படு வேகமாகக் கடந்தது கூட அவருக்குத் தெரியவில்லை.
விழா ஒன்றில் கௌரவிக்கப்படுகிறார் பிரேம்குமார் |
தானும் ஒரு தொழிலாளி என்பதால்
தொழிலாளர்களுடன் இணைந்து செயல்பட்டார். இதனால், தொழிலாளர்கள் அவரை தொழிற்
சங்கத்தின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர்.
1987 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் சிலரை நீக்கிய
போது, நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் துவங்கியது. அதில் அவரும் பங்கெடுத்தார்.
பலர் கைதான போது, அனைவரையும் ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார், பிரேம்குமார்.
தொழிலாளர்களின் உறுதியான போராட்டம், நிறுவனத்தின்
பிடிவாதமான போக்கு காரணமாக அந்த நிறுவனம் அப்போது மூடப்பட்டது. இதனால், அனைவருக்கும்
வேலை இல்லாத நிலை உருவானது.
1991 ஆம்
ஆண்டு நடைபெற்ற ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் ஒரு
நிறுவனத்தை உருவாக்கக் கூடாது என்று விவாதம் நடைபெற்றது. அதன் முடிவில் வலிமையான
ஒரு நிறுவனத்தைக் கட்டமைப்பது என்றும், அதற்கு தலைவர் ராமச்சந்திரன்
வழிக்காட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தொடர்பில் உள்ள எல்லா வாடிக்கையாளர்களையும்
பயன்படுத்திக் கொள்வது என்றும், ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு தொகை நிறுவனத்திற்கு
முதலீடு செய்வது என்றும் முடிவு செய்த போது, தனது சார்பாக அதிகமாக பதினைந்தாயிரம்
முதலீடு செய்தார் பிரேம்குமார். அதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது தாய் மாமன் தோத்தாத்திரி
நாயுடு.
தொழிலாளர்களால் ‘எஸ்.ஆர். & கே.டி.’
என்கிற பெயரில் துவங்கப்பட்ட அந்த நிறுவனம் சென்னை, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களில்
பார்சல் சர்வீஸ் வேலைகளை வெகு சிறப்பாகச் செய்து கொண்டிருந்தது.
வெற்றி மீது வெற்றி வந்து அவர்களைச் சேர்ந்த
போது, போட்டியும் பிரிவும் உருவாயின.
விளைவு?
சிலர் விலகிச் சென்று வேறு நிறுவனம்
தொடங்கினார்கள். தொழில் போட்டி கடுமையானது.
தன்னுடன் உள்ள எட்டு பங்குதாரர்களின் ஒற்றுமையுடன்
தனது நிறுவனத்தை இன்றளவும் வெகு சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்
பிரேம்குமார். இவர்களிடம் பத்து கனரக வாகனங்கள், ஐந்து மினி லாரிகள் என பதினைந்து
லாரிகள் உள்ளன.
இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்
உள்ளனர். அம்பத்தூர், பாடி, பாரிமுனை, போரூர், ஓசூர், பெங்களூர் என ஆகிய ஆறு
இடங்களில் அலுவலகங்கள் இயங்குகின்றன. ஓட்டுநர்கள், உதவியாளர்கள், தொழிலாளர்கள்,
அலுவலக உதவியாளர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனங்களில்
பணிபுரிகின்றனர்.
ஊழியர்களுக்கும், தொழிலளர்களுக்கும் முதல்
தேதியில் நல்ல சம்பளம், எதிர்ப்பார்க்காத போனஸ், தொழிலாளர்களின் குடும்ப
நிகழ்வுகளுக்கு உதவி என தனது குடும்பத்திற்கு உதவுவது போலவே தனது தொழிலாளர்களின்
குடும்பத்திற்கும் உதவி வருகிறார், பிரேம்குமார். அதற்கு அவரது பங்குதாரர்களும்
உதவியாக இருக்கிறார்கள்.
‘’என்னுடைய வளர்ச்சிக்கும்
முன்னேற்றத்திற்கும்... எனது மனைவி ஷோபாதான் முக்கிய காரணமாக இருக்கிறார்’’ என்று
கூறும் பிரேம்குமார், ‘’அவர் வந்த பிறகுதான் எங்களின் நிறுவனத்தை தொடங்கினோம்’’
என்று பெருமைப்படுகிறார்.
தன் மாமனார் நரசிம்மன், மாமியார் சுசீலா,
மைத்துனர்கள் சுரேஷ், ரமேஷ், மகேஷ் ஆகியோரும் தனக்கு உதவியாக இருக்கிறார்கள் என்று
கூறும் அவர், தனக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள்
பேசத் தெரியும் என்கிறார்.
பல விழாக்களில் பாராட்டும், பரிசுக் கேடயங்களும்
பெற்றிருக்கும் பிரேம்குமார், சூளைமேடு பகுதியில் உள்ள கில்நகர் பூங்கா நடையாளர்
சங்கத்தின் பொதுச் செயலாளராக தற்போது பதவி வகித்து வருகிறார்.
பிரேம்குமாரின் துணைவியார் ஷோபா பி.ஏ. வரலாறு
படித்தவர். இவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் பேச
தெரியும். ஓவியக்கலையில் சிறந்து விளங்கும் ஷோபா, அழகுக் கலையிலும், ஆடை
வடிவமைப்பதிலும் ஆர்வம் கொண்டவர். சிறந்த பள்ளி ஆசிரியையாகவும் பாராட்டு
பெற்றிருக்கும் அவர் மிகச் சிறந்த படிப்பாளி.
பெங்களூர், மைசூர், மும்பை, கோவா,
கொல்கத்தா, டெல்லி, புவனேஸ்வரம், ஐதராபாத், விசாகப்பட்டினம், சாலக்குடி என
இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ள பிரேம்குமார் இன்று வரை
வெளிநாடுகள் எதற்கும் செல்லவில்லை. அதற்குக் காரணம், எனக்கு அதற்கான சூழ்நிலைகள்
அமையவில்லை என்கிறார்.
இந்தியத் திருநாட்டில் எங்கு பேரிடர்
ஏற்படும் போதும் தனது தனிப்பட்ட நிதி உதவி மட்டுமின்றி, தனது நிறுவனம் மூலமாகவும்
நிதி உதவி செய்வதில் முதலாவதாக இருக்கும் பிரேம்குமார், அறிந்தவர், அறியாதவர் என
யாரேனும் இல்லை என்று வந்துவிட்டால் அவர்களின் பாத்திரம் அறிந்து ஆதரிப்பதிலும்
உதவுவதிலும் முதன்மையானவர். தான் செய்யும் உதவிகளை வெளியே தெரிவிக்க விரும்பாத
பண்பாளர்.
தன் தனித்தனி திறமைகளால் அந்தத் துறைகளில்
மட்டும் முன்னுக்கு வந்தவரை விட அனைத்துத் துறைகளிலும் தன் எண்ணங்களை செலவிடும்
பிரேம்குமார், கடந்த முப்பத்தி நான்கு ஆண்டுகளாக லாரி தொழிலில் இயங்கி வருகிறார்
என்றால் அதற்குக் காரணம் இவரது தொழில் திறமை, நிர்வாகத் திறமை மட்டுமல்ல, இவரது
பழகும் தன்மைக்கும் அதில் முக்கிய பங்குண்டு.
No comments:
Post a Comment