Monday, April 22, 2019

‘நகைச்சுவை’ நாயகன் ‘லயன்’ அமல்ராஜ்

‘லயன்’ அமல்ராஜ்

தேவக்கோட்டை அருகில் உள்ள மாவிடுதிக்கோட்டை கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர் அமல்ராஜ். இவரது தந்தை பெயர் எஸ்.வேதமுத்து உடையார். தாயார் பெயர் குழந்தையம்மாள். இவருடன் நிர்மலா ராணி, ஜேம்ஸ் ராணி என இரு சகோதரிகளும், ஜான் பிரிட்டோ என்கிற ஒரு சகோதரனும் பிறந்தனர்.

மாவிடுதிக்கோட்டை கிராமப் பஞ்சாயத்துப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த அமல்ராஜ், ஆறு, மற்றும் ஏழாம் வகுப்புகளை தேவக்கோட்டையில் உள்ள நகராட்சி உயர்நிலை பள்ளியிலும், எட்டாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை தேபிரித்தோ உயரிநிலைப் பள்ளியிலும் முடித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.யூசி, சென்னை பல்கலைக் கழகத்தில் பி.ஏ. என்று தனது பட்டப் படிப்பை தொடர்ந்தார்.

ஆரம்பத்தில் தனது தந்தை தலைவராக இருந்த கிராம கூட்டறவு சங்கத்தில் கிளார்க் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலையில் அவருக்கு திருப்தி இல்லை. படிப்புக்குத் தகுந்த உத்தியோகம், நிரந்தர வருமானம் வேண்டும் என்று விரும்பினார். அதனால், தனது கிராமத்தைச் சேர்ந்த மாமா பொன்னையாவுடன் சென்னைக்குச் சென்ற அமல்ராஜ், சென்னையில் இருந்த மைத்துனர் சவரிமுத்து அவர்களைச் சந்தித்து தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். 

எதிர்ப்பார்க்கிற வேலைக்கு முயற்சி செய்து கொண்டே, தற்போது உணவுக்கும் தங்குவதற்கும் ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த செளரிமுத்து, ஒரு விறகுக் கடையில் இவரை வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

லயன்ஸ் கிளப் உதவி விழாவில்...
விறகுக் கடையில் மூன்று மாதமும், அதன் பிறகு ஒரு ஓட்டலில் மூன்று மாதமும் வேலை செய்த அமல்ராஜ், முன்னாள் மத்திய அமைச்சர்  திரு. ஓ.வி.அழகேசனின் வீட்டில் வேலைகளைக் கவனித்து வந்த மாமா பொன்னையா மூலம் திரு ஓ.வி.அழகேசன் அவர்களின் மருமகன் பொறியாளர் வி.ஆர்.வைத்தியநாதன் உதவியால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 1972 ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார்.

சாதாரண ஊழியராக வேலை பார்க்கத் தொடங்கிய அமல்ராஜ், பின்பு எழுத்தர் பணிக்கு உயர்ந்தார். அரசுத் தேர்வுகள் எழுதி மேலும் பல பதவி உயர்வுகள் என்று முன்னேற்றம் கண்டார்.

1988 ஆம் ஆண்டு மாநிலக் கணக்குத் தணிக்கையாளர் நடத்திய தேர்வில் இருநூறு பேர் கலந்து கொண்டனர். அதில் வெற்றி பெற்ற பத்து பேரில் ஒருவராகத் தேர்வான அமல்ராஜ், உதவி கணக்கு அலுவலர் பதவியில் அமர்ந்தார். அந்த பதவியில் 18 ஆண்டுகள் பணியாற்றி அதே பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருச்சங்கோடு, தாம்பரம், ஆலந்தூர், திருவண்ணாமலை, உளுந்தூர்ப்பேட்டை, கடலூர், சென்னை என பல இடங்களில் பணியாற்றிய அமல்ராஜ், காஞ்சிபுரத்தில் பணியாற்றிய போது ஓய்வு பெற்றார். .

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் கூட்டுறவு நாணய சங்க தேர்தலில் போட்டியிட்டு  இயக்குநராக பணியாற்றினார். காஞ்சிபுரத்தில் பணியாற்றிய போது கணக்கு தணிக்கைகளை சரி செய்து சிறந்த கணக்கு அலுவலராகவும் பாராட்டு பெற்றுள்ளார்.

ஆட்சிப் பணியாளர் சங்க உறுப்பினராக இருந்த போதும், கணக்கு அலுவலர் சங்கத்தில் இருந்த போதும் பல பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஹாக்கி, கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தார்.

சிறு வயதில் இருந்தே இவருக்கு வாசிப்பு ஆர்வம் அமைந்திருந்தது. தினசரிப் பத்திரிகை, வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமின்றி நூல் நிலையங்களுக்குச் சென்று கதை, கவிதை, கட்டுரைகள் என நிறைய வாசித்து தன் அறிவை மேம்படுத்திக்கொண்டார்.

பள்ளியில் படிக்கும் போதே பாரதி தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகி இருக்கிறார். ஆரம்பத்தில் கம்யூனிச கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட அமல்ராஜ், பெருந்தலைவர் காமராஜர் மீது கொண்ட ஈர்ப்பால் காங்கிரஸ் கொள்கையில் ஆர்வம் கொண்டார். 1972 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் காமராஜர் அவர்கள், அரசுக்கு எதிராக நடத்திய ஒரு ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

காமராஜரின் இறப்புக்குப் பின்பு ‘விடுதலை’ நாளிதழ் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதனால், சமூக நீதிக் கொள்கை, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு ஏற்பட்டு தி.மு.க. ஆதரவாளராக மாறினார்.

பொது வாழ்க்கையில் ஈடுபட எண்ணி அரிமா சங்கத்தில் இணைந்து செயலாற்றி வரும் அமல்ராஜ், அரிமா சங்கம் மூலம் மருத்துவ முகாம்கள் நிறைய நடத்தி உள்ளார். கண்தானம் பெற்று தேவைப்படுவோருக்கு வழங்கி உள்ளார். இல்லங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தல் போன்ற செயல்களை, தொடர்ந்து சங்கங்கள் மூலமாகவும், தனது சார்பிலும் செய்து வருகிறார்.

கில்நகர் பூங்கா நடையாளர் சங்கத்தில் பொருளாளராக, செயலாளராக பதவி வகித்துள்ள அமல்ராஜ், சங்க நிர்வாகிகளுடன் இணைந்து பூங்காவை மேம்பாடுத்த அதிகாரிகளை சந்தித்துப் பல பணிகள் நடைபெறுவதற்கு காரணமாக இருந்துள்ளார். 

எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் இயங்கும் பார்கவகுல முன்னேற்ற சங்கத்தின் தென் சென்னை மாவட்ட பொருளாளராகப் பதவி வகித்து வருகிறார்.

FACTS என்கிற ஒரு சமூக அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்து வரும் அமல்ராஜ், தமிழ்நாடு கத்தோலிக்க சிறுபான்மையினர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணக் கொள்ளையை எதிர்த்து போராடி உள்ளார். அதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டு திருவள்ளூரில் வாழ்ந்து ஒய்வு பெற்ற ஆசிரியர் தன்ராஜ் – இருதயமேரி தம்பதியின் மகள் சிறுமலர் சியோன்குமாரி என்பவரை 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேக்தலின் என்கிற மகளும், தீபன் சந்தியாகு என்கிற மகனும் பிறந்தனர்.

மதுரவாயலில் உள்ள ராஜராஜேஸ்வரி பொறியியல் கல்லூரியில் பி.ஈ பட்டப்படிப்பு முடித்த மேக்தலின், அமெரிக்காவில் ஓர் ஆண்டும், சீனாவில் மூன்று மாதங்களும் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி உள்ளார். 

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டம் கிளியூர், செல்வம் – ரோசாலி தம்பதியின் மூத்த மகன் ஜான் பீட்டர் என்பவருக்கும் மேக்தலினுக்கும் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஜான் பீட்டர் -  மேக்தலின் தம்பதிக்கு ஜாடன் என்கிற மகனும், ரேச்சல் ஷேரா என்கிற மகளும் உள்ளனர். 

மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்துள்ள மகன் தீபன் சந்தியாகு, பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பராக பணியாற்றி வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மாரந்தை கிராமத்தை சேர்ந்த அமலதாஸ் - விக்டோரியா தம்பதி பல ஆண்டுகள் பர்மாவில் வசித்தனர். பிறகு சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் குடியேறினர். அவர்களின் மகள் எழிலரசியை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபன் சந்தியாகு திருமணம் செய்து கொண்டார். பி.ஏ., எம்.பி.ஏ. படித்துள்ள எழிலரசி, ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சென்னை அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

சாதாரண கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து வாழ்க்கையைத் தொடங்கிய அமல்ராஜ், தான் வெளியூர்களில் பணியாற்றிய போதும் மனைவி குழந்தைகளை சென்னையிலேயே தங்க வைத்துள்ளார். மனைவி சென்னையில் பணியாற்றியதாலும், குழந்தைகள் படிப்பிற்கு இடையூறு வந்துவிடக் கூடாது என்பதாலும் குடும்பத்தைச் சென்னையில் விட்டு வேறு ஊருக்கு மாறவில்லை.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்மணி இருப்பார் என்பதற்கு அடையாளம் தனது மனைவி என்று அடிக்கடி சொல்லிச் சிலாகிப்பார். இவருடன் பிறந்த சகோதரிகள் அனைவரும் இவர் மீது மிகவும் பாசம் கொண்டவர்கள். பல்வேறு காலகட்டங்களில் இவருக்கு உதவிகள் செய்துள்ளனர்.

அதைப் போல இவரின் மனைவியோடு பிறந்த சகோதரி ஜாஸ்பர் இளம்வயதிலேயே வேலை தேடவும், பயிற்சிகள் பெறவும் திருவள்ளூரிலிருந்து சென்னைக்கு வந்தவர், அமல்ராஜ் அவர்களின் வீட்டில் தங்கினார். அமல்ராஜ் அவர்களும், அவரது மனைவியும் பணிக்கு சென்று விடுவதால் வீட்டுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செயலாற்றினார். திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ஜாஸ்பர் தனது 57 வது வயதில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார்.

இவரது மனைவியின் இன்னொரு தங்கை ஸ்வீட்லின் அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். பல்வேறு காலகட்டங்களில் மிகவும் உதவியாக இருந்திருக்கிறார். அமல்ராஜும் அவரது மனைவியும் சேர்ந்து வீடு கட்டும் போதும், மற்றும் பல்வறு காலகட்டங்களிலும் பண உதவிகள் செய்துள்ளார்.   

அமல்ராஜின் தந்தை வேதமுத்து நாட்டில் உள்ள பிரச்சினைகளை முன் வைத்து பதினைந்து புத்தகங்கள் எழுதி உள்ளார், இவரது புத்தகங்களை 2018 ஆம் ஆண்டு தேவக்கோட்டை ஆனந்தா கல்லூரியில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நீதியரசர் இராம சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.

திரு வேதமுத்து அவர்களின் சில கட்டுரைகள் தினமணி பத்திகையில் வெளிவந்தன. சில கட்டுரைகள் வானொலியில் ஒலிபரப்பாகி உள்ளன. 92 வயதாகும் இவரது தந்தை வேதமுத்து இன்றும் புத்தகங்கள் எழுதி வருகிறார்.

கிராம, ஒன்றிய, வட்டார அளவில் சிறப்பாகப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் இவரது தந்தை உருவாக்கிய வேதமுத்து கல்வி அறக்கட்டளை கடந்த 25 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து தரும் பணியை ஆனந்தா கல்லூரி நிர்வாகத்திடம் இப்போது ஒப்படைத்துள்ளார். அந்தப் பணியினை ஆனந்தா கல்லூரி நிர்வாகம் சிறப்பாகச் செய்து வருகிறது.    

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு இவரது தந்தை தனது உடலைத் தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களுக்குச் சுற்றுலா பயணம் செய்துள்ள அமல்ராஜ், தாய்லாந்து நாட்டிற்கு இரண்டு முறையும், சிங்கப்பூர், மலேஷியா, உஸ்பெகிஷ்தான் போன்ற வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளார்.

நட்புக்கும், மரியாதைக்கும், முற்போக்கு சிந்தனைக்கும் சொந்தக்காரரான அமல்ராஜ், எப்போதும் ஜாலியாக சிரித்துப் பேசக் கூடிய சுபாவம் உள்ளவர். வெளிப்படையாகப் பேசக் கூடியவர், தைரியமான மனிதர் என்று சக நண்பர்களால் கொண்டாடப்படும் அமல்ராஜ், எங்கள் நட்பு வட்டத்திற்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் எனலாம்.  

No comments:

Post a Comment