Monday, April 22, 2019

‘துறைமுகம்’ ராஜன் பாபு

‘துறைமுகம்’ ராஜன் பாபு

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை மாதம் பதினைந்தாம் தேதி பிறந்தவர், எங்களால் எம்.ஜி.ஆர் என்று அன்புடன் அழைக்கப்படும் ராஜன் பாபு அவர்கள்.

தர்மலிங்க முதலியார் – தனம்மாள் தம்பதிகளுக்கு 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ராஜன் பாபு. இவருடன் துளசிங்கம், ராமமூர்த்தி, திருநாவுக்கரசு என்று மூன்று சகோதரர்களும், ஈஸ்வரி என்கிற ஒரு சகோதரியும் பிறந்தனர்.

வங்கியில் வேலை பார்த்துக் கொண்டே பழைய வண்ணாரப்பேட்டையில் மின்பொருள்கள் கடை வைத்திருந்த தர்மலிங்க முதலியார், தனது மகன்களை அங்குள்ள பள்ளியில் படிக்க வைத்தார்.

நமது நண்பர் ராஜன் பாபுவுக்கு எட்டாவதுக்கும் மேல் படிக்க ஆர்வமில்லாமல் போனது. அதற்கு குடும்ப வறுமை முக்கிய காரணமாக இருந்தது. இதனால், ஐஸ் விற்பது, அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் உதவியாளர் வேலை என்று இளம் வயதிலேயே கஷ்டங்களை அனுபவிக்கத் தொடங்கினார்.

பிறகு மண்ணடி பகுதியில் இருந்த சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தில் அலுவலக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து, அங்கு சில மாதங்கள் வேலை செய்துள்ளார்.  

அரசு வேலை கிடைக்கிறது என்று பேசின்பிரிட்ஜ்ஜில் உள்ள தமிழக அரசின் மின்சார தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பூமிக்கு அடியில் சென்று சாதனங்களை சேர்க்கும் வேலை.

அந்த கடினமான வேலையை அவரால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. அதற்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. ஒரு வருட காலத்திற்கு பிறகு அந்த வேலையை உதறியவர், அதன் பிறகு என்ன வேலையைத் தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பத்தில் இருந்தார்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யச் சென்ற போது, அந்த அலுவலகத்திற்கு எதிரே இருந்த துறைமுகத்தில் துறைமுக காவல் துறையில் வேலை இருப்பதை அறிந்து, அதற்கு விண்ணப்பித்தார்.

அவரது முயற்சி வீண் போகவில்லை. பத்தொன்பது வயதில் துறைமுக காவல் துறையில் (PSF) சேர்ந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் துறைமுக காவலராக இருந்த அவரை, வெளி மாநிலத் துறைமுகங்களுக்கு அனுப்ப நிர்வாகம் முடிவு செய்த போது, அதை அவர் ஏற்கவில்லை.

குடும்பத்துடன் சென்னையில் இருக்கவே விரும்பினார். மற்ற மாநிலங்களில் வேலை செய்ய அவருக்குத் துளியும் விருப்பம் இல்லை. இதனால், மருத்துவமனைக்குச் சென்று தனக்கு கண் பார்வை சரியில்லை என்று சான்றிதழ் பெற்று CISF  வேலைக்கு அனுப்புவதிலிருந்து தப்பித்துக் கொண்டார். அதனால், அவருக்கு குமாஸ்தாவாக அங்கு பணி கிடைத்தது.

ஆற்காடு அருகில் உள்ள மோசூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி முதலியார், ஜெகதாம்பாள் தம்பதியின் மூன்றாவது மகள் கோதாவரி என்பவரை 1968 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், ராஜன்பாபு. இவர்களுக்கு லட்சுமி என்கிற மகளும், பெருமாள், காந்தன் என்கிற இருமகன்களும் பிறந்தனர்.
திருமணத்திற்குப் பிறகு சூளைமேடு பகுதியில் உள்ள அமீர்ஜான் சாகிப் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறியவர், குழந்தைகள் கொசுத் தொல்லைக்கு ஆளாவதை சகிக்க முடியாமல் குரோம்பேட்டை ஏரியாவுக்கு மாறினார். அங்கு இருந்தபடியே அஸ்தினாபுரம் பகுதியில் இடம் வாங்கி அதில் வீடு கட்டினார்.
சொந்த வீடு மகிழ்ச்சியான வாழ்க்கை என்று அந்த வீட்டில் குடியேறிய அவருக்கு, உடல்நிலையில் பிரச்சனை.
இடம் மாறி இருந்தால் உயிருக்கு நல்லது என்று யாரோ தூக்கிப் போட்ட குண்டு அவரை மீண்டும் சூளைமேடு பகுதிக்கே வர வழைத்தது. கங்கையம்மன் கோவில் தெரு, சௌராஷ்டிரா நகர் இரண்டாவது தெரு, என்று வாடகை வீட்டுக்கு குடியேறியவர், பிறகு சூளைமேடு பகுதியில் இடம் வாங்க வேண்டும் என்று கனவு கண்டார்.

அந்த கனவை தெய்வசிகாமணி இரண்டாவது தெருவில் உள்ள இடம் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது.

மகள் லட்சுமியை சேத்துப்பட்டு சேவா சதன் பள்ளியில் பத்தாவது வரையில் படிக்க வைத்தவர், சூளைமேடு பள்ளியில் பிளஸ் டூ படிப்பை முடிக்க வைத்தார். யுனிவர் சிட்டியில் பி.ஏ. முடித்த போது, ஆற்காடு சுப்பிரமணி – விசாலாட்சி தம்பதியின் மகன் ராஜேந்திரன் என்பவருக்கு லட்சுமியைத் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சீனியர் செக்சன் எஞ்சினியராக பணியாற்றும் ராஜேந்திரன் – லட்சுமி தம்பதிக்கு வினிதா என்கிற மகளும், விக்னேஷ் என்கிற மகனும் உள்ளனர்.

மூத்தமகன் பெருமாள் எம்.காம் முடித்த போது, துறைமுகத்தில் தன்னைப் போலவே வேலைக்குச் சேர வேண்டும் என்று விரும்பினார். ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு அவருக்கு அங்கு அலுவலக வேலை கிடைத்தது.

ஆற்காடு அருகே உள்ள மேட்டுக்குறிச்சி சண்முகம் - ராஜேஸ்வரி தம்பதியின் மகள் குணா என்பவரை மகன் பெருமாளுக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு காயத்ரி என்கிற மகளும், நந்தகோபால் என்கிற மகனும் உள்ளனர்.

ப்ளஸ் டூ முடித்துவிட்டு டிரைவர் வேலை செய்து வந்த இரண்டாவது மகன் கந்தனை, சென்னை மாநகர பேருந்து கழகத்தில் டிரைவர் வேலையில் சேர காரணமாக இருந்த ராஜன்பாபு, திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிரபு – தேவி தம்பதியின் மகள் பொம்மி என்பவரைக் கந்தனுக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு மானஸா தேவி என்கிற மகளும், விஷ்ணு வரதன் என்கிற மகனும் உள்ளனர்.

இவருடைய ஒவ்வொரு முயற்சிக்கும் இவரது மனைவி கோதாவரி அவர்கள் துணையாக இருந்திருக்கிறார். எழுபத்தி ஏழு வயதிலும் ஒரு இளைஞனைப் போல சுறுசுறுப்பாக ராஜன்பாபு இருக்கிறார் என்றால், அதற்கு முழுக் காரணம் அவரது துணைவியார் கோதாவரி என்றால், அது மிகையாகாது.

வாழும் போது சொந்த இடம் இல்லாமல் கஷ்டப்பட்டவர் என்னுடைய தந்தை. அதனால் நான் இறக்கும் போது சொந்த வீட்டில்தான் இறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால், சிறிய வருமானத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தி, அதில் கொஞ்சம் கொஞ்சமாகக் குருவி சேர்ப்பது போலப் பணம் சேர்த்து இடம் வாங்கி வீடு கட்டி இருக்கிறேன் என்று சொல்லும் ராஜன் பாபு, எனது மகன்களும், மகளும் தனித் தனியாக சொந்த வீட்டில் இப்போது வசித்து வருகிறார்கள். இது எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. அதுதான் என் வாழ்க்கையின் சாதனையாகக் கருதுகிறேன் என்கிறார்.

பெங்களூர், மைசூர், மும்பை, கோவா, பூனா, அஜந்தா, எல்லோரா, அம்பி, துங்கபத்ரா அணைக்கட்டு, ஜோக் நீர் வீழ்ச்சி, அரியானா, சிம்லா, ஆக்ரா, டெல்லி, ஹரித்துவார், ரிசிகேஷ், திருச்சி உச்சி பிள்ளையார் கோவில், சமயபுரம் மாரியம்மன், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், வடலூர் வள்ளலார், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர், ராமேஸ்வரம், கன்யாகுமரி, சுசீந்திரம் என பல இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா குடும்பத்தினருடன் சென்றுள்ள ராஜன்பாபு, வெளிநாடுகள் சென்றதில்லை என்கிறார்.

இன்னும் இரண்டாண்டுகளில் சதாபிஷேகம் விழா காண இருக்கும் எங்கள் ராஜன் பாபு பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அவரின் சாதனைகளை முறியடிக்கக் கூட ஒருவர் வரக்கூடும். ஆனால், இத்தனை சாதனைகளைச் சாதித்த பின்னரும் அடக்கத்தின் மறு உருவமாக இருக்கிறாரே அந்தச்  சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா என்றால் அது சந்தேகம்தான்.No comments:

Post a Comment