Monday, April 22, 2019

‘நகைச்சுவை’ நாயகன் ‘லயன்’ அமல்ராஜ்

‘லயன்’ அமல்ராஜ்

தேவக்கோட்டை அருகில் உள்ள மாவிடுதிக்கோட்டை கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர் அமல்ராஜ். இவரது தந்தை பெயர் எஸ்.வேதமுத்து உடையார். தாயார் பெயர் குழந்தையம்மாள். இவருடன் நிர்மலா ராணி, ஜேம்ஸ் ராணி என இரு சகோதரிகளும், ஜான் பிரிட்டோ என்கிற ஒரு சகோதரனும் பிறந்தனர்.

மாவிடுதிக்கோட்டை கிராமப் பஞ்சாயத்துப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த அமல்ராஜ், ஆறு, மற்றும் ஏழாம் வகுப்புகளை தேவக்கோட்டையில் உள்ள நகராட்சி உயர்நிலை பள்ளியிலும், எட்டாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை தேபிரித்தோ உயரிநிலைப் பள்ளியிலும் முடித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.யூசி, சென்னை பல்கலைக் கழகத்தில் பி.ஏ. என்று தனது பட்டப் படிப்பை தொடர்ந்தார்.

ஆரம்பத்தில் தனது தந்தை தலைவராக இருந்த கிராம கூட்டறவு சங்கத்தில் கிளார்க் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலையில் அவருக்கு திருப்தி இல்லை. படிப்புக்குத் தகுந்த உத்தியோகம், நிரந்தர வருமானம் வேண்டும் என்று விரும்பினார். அதனால், தனது கிராமத்தைச் சேர்ந்த மாமா பொன்னையாவுடன் சென்னைக்குச் சென்ற அமல்ராஜ், சென்னையில் இருந்த மைத்துனர் சவரிமுத்து அவர்களைச் சந்தித்து தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். 

எதிர்ப்பார்க்கிற வேலைக்கு முயற்சி செய்து கொண்டே, தற்போது உணவுக்கும் தங்குவதற்கும் ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த செளரிமுத்து, ஒரு விறகுக் கடையில் இவரை வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

லயன்ஸ் கிளப் உதவி விழாவில்...
விறகுக் கடையில் மூன்று மாதமும், அதன் பிறகு ஒரு ஓட்டலில் மூன்று மாதமும் வேலை செய்த அமல்ராஜ், முன்னாள் மத்திய அமைச்சர்  திரு. ஓ.வி.அழகேசனின் வீட்டில் வேலைகளைக் கவனித்து வந்த மாமா பொன்னையா மூலம் திரு ஓ.வி.அழகேசன் அவர்களின் மருமகன் பொறியாளர் வி.ஆர்.வைத்தியநாதன் உதவியால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 1972 ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார்.

சாதாரண ஊழியராக வேலை பார்க்கத் தொடங்கிய அமல்ராஜ், பின்பு எழுத்தர் பணிக்கு உயர்ந்தார். அரசுத் தேர்வுகள் எழுதி மேலும் பல பதவி உயர்வுகள் என்று முன்னேற்றம் கண்டார்.

1988 ஆம் ஆண்டு மாநிலக் கணக்குத் தணிக்கையாளர் நடத்திய தேர்வில் இருநூறு பேர் கலந்து கொண்டனர். அதில் வெற்றி பெற்ற பத்து பேரில் ஒருவராகத் தேர்வான அமல்ராஜ், உதவி கணக்கு அலுவலர் பதவியில் அமர்ந்தார். அந்த பதவியில் 18 ஆண்டுகள் பணியாற்றி அதே பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருச்சங்கோடு, தாம்பரம், ஆலந்தூர், திருவண்ணாமலை, உளுந்தூர்ப்பேட்டை, கடலூர், சென்னை என பல இடங்களில் பணியாற்றிய அமல்ராஜ், காஞ்சிபுரத்தில் பணியாற்றிய போது ஓய்வு பெற்றார். .

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் கூட்டுறவு நாணய சங்க தேர்தலில் போட்டியிட்டு  இயக்குநராக பணியாற்றினார். காஞ்சிபுரத்தில் பணியாற்றிய போது கணக்கு தணிக்கைகளை சரி செய்து சிறந்த கணக்கு அலுவலராகவும் பாராட்டு பெற்றுள்ளார்.

ஆட்சிப் பணியாளர் சங்க உறுப்பினராக இருந்த போதும், கணக்கு அலுவலர் சங்கத்தில் இருந்த போதும் பல பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஹாக்கி, கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தார்.

சிறு வயதில் இருந்தே இவருக்கு வாசிப்பு ஆர்வம் அமைந்திருந்தது. தினசரிப் பத்திரிகை, வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமின்றி நூல் நிலையங்களுக்குச் சென்று கதை, கவிதை, கட்டுரைகள் என நிறைய வாசித்து தன் அறிவை மேம்படுத்திக்கொண்டார்.

பள்ளியில் படிக்கும் போதே பாரதி தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகி இருக்கிறார். ஆரம்பத்தில் கம்யூனிச கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட அமல்ராஜ், பெருந்தலைவர் காமராஜர் மீது கொண்ட ஈர்ப்பால் காங்கிரஸ் கொள்கையில் ஆர்வம் கொண்டார். 1972 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் காமராஜர் அவர்கள், அரசுக்கு எதிராக நடத்திய ஒரு ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

காமராஜரின் இறப்புக்குப் பின்பு ‘விடுதலை’ நாளிதழ் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதனால், சமூக நீதிக் கொள்கை, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு ஏற்பட்டு தி.மு.க. ஆதரவாளராக மாறினார்.

பொது வாழ்க்கையில் ஈடுபட எண்ணி அரிமா சங்கத்தில் இணைந்து செயலாற்றி வரும் அமல்ராஜ், அரிமா சங்கம் மூலம் மருத்துவ முகாம்கள் நிறைய நடத்தி உள்ளார். கண்தானம் பெற்று தேவைப்படுவோருக்கு வழங்கி உள்ளார். இல்லங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தல் போன்ற செயல்களை, தொடர்ந்து சங்கங்கள் மூலமாகவும், தனது சார்பிலும் செய்து வருகிறார்.

கில்நகர் பூங்கா நடையாளர் சங்கத்தில் பொருளாளராக, செயலாளராக பதவி வகித்துள்ள அமல்ராஜ், சங்க நிர்வாகிகளுடன் இணைந்து பூங்காவை மேம்பாடுத்த அதிகாரிகளை சந்தித்துப் பல பணிகள் நடைபெறுவதற்கு காரணமாக இருந்துள்ளார். 

எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் இயங்கும் பார்கவகுல முன்னேற்ற சங்கத்தின் தென் சென்னை மாவட்ட பொருளாளராகப் பதவி வகித்து வருகிறார்.

FACTS என்கிற ஒரு சமூக அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்து வரும் அமல்ராஜ், தமிழ்நாடு கத்தோலிக்க சிறுபான்மையினர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணக் கொள்ளையை எதிர்த்து போராடி உள்ளார். அதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டு திருவள்ளூரில் வாழ்ந்து ஒய்வு பெற்ற ஆசிரியர் தன்ராஜ் – இருதயமேரி தம்பதியின் மகள் சிறுமலர் சியோன்குமாரி என்பவரை 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேக்தலின் என்கிற மகளும், தீபன் சந்தியாகு என்கிற மகனும் பிறந்தனர்.

மதுரவாயலில் உள்ள ராஜராஜேஸ்வரி பொறியியல் கல்லூரியில் பி.ஈ பட்டப்படிப்பு முடித்த மேக்தலின், அமெரிக்காவில் ஓர் ஆண்டும், சீனாவில் மூன்று மாதங்களும் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி உள்ளார். 

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டம் கிளியூர், செல்வம் – ரோசாலி தம்பதியின் மூத்த மகன் ஜான் பீட்டர் என்பவருக்கும் மேக்தலினுக்கும் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஜான் பீட்டர் -  மேக்தலின் தம்பதிக்கு ஜாடன் என்கிற மகனும், ரேச்சல் ஷேரா என்கிற மகளும் உள்ளனர். 

மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்துள்ள மகன் தீபன் சந்தியாகு, பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பராக பணியாற்றி வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மாரந்தை கிராமத்தை சேர்ந்த அமலதாஸ் - விக்டோரியா தம்பதி பல ஆண்டுகள் பர்மாவில் வசித்தனர். பிறகு சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் குடியேறினர். அவர்களின் மகள் எழிலரசியை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபன் சந்தியாகு திருமணம் செய்து கொண்டார். பி.ஏ., எம்.பி.ஏ. படித்துள்ள எழிலரசி, ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சென்னை அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

சாதாரண கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து வாழ்க்கையைத் தொடங்கிய அமல்ராஜ், தான் வெளியூர்களில் பணியாற்றிய போதும் மனைவி குழந்தைகளை சென்னையிலேயே தங்க வைத்துள்ளார். மனைவி சென்னையில் பணியாற்றியதாலும், குழந்தைகள் படிப்பிற்கு இடையூறு வந்துவிடக் கூடாது என்பதாலும் குடும்பத்தைச் சென்னையில் விட்டு வேறு ஊருக்கு மாறவில்லை.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்மணி இருப்பார் என்பதற்கு அடையாளம் தனது மனைவி என்று அடிக்கடி சொல்லிச் சிலாகிப்பார். இவருடன் பிறந்த சகோதரிகள் அனைவரும் இவர் மீது மிகவும் பாசம் கொண்டவர்கள். பல்வேறு காலகட்டங்களில் இவருக்கு உதவிகள் செய்துள்ளனர்.

அதைப் போல இவரின் மனைவியோடு பிறந்த சகோதரி ஜாஸ்பர் இளம்வயதிலேயே வேலை தேடவும், பயிற்சிகள் பெறவும் திருவள்ளூரிலிருந்து சென்னைக்கு வந்தவர், அமல்ராஜ் அவர்களின் வீட்டில் தங்கினார். அமல்ராஜ் அவர்களும், அவரது மனைவியும் பணிக்கு சென்று விடுவதால் வீட்டுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செயலாற்றினார். திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ஜாஸ்பர் தனது 57 வது வயதில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார்.

இவரது மனைவியின் இன்னொரு தங்கை ஸ்வீட்லின் அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். பல்வேறு காலகட்டங்களில் மிகவும் உதவியாக இருந்திருக்கிறார். அமல்ராஜும் அவரது மனைவியும் சேர்ந்து வீடு கட்டும் போதும், மற்றும் பல்வறு காலகட்டங்களிலும் பண உதவிகள் செய்துள்ளார்.   

அமல்ராஜின் தந்தை வேதமுத்து நாட்டில் உள்ள பிரச்சினைகளை முன் வைத்து பதினைந்து புத்தகங்கள் எழுதி உள்ளார், இவரது புத்தகங்களை 2018 ஆம் ஆண்டு தேவக்கோட்டை ஆனந்தா கல்லூரியில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நீதியரசர் இராம சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.

திரு வேதமுத்து அவர்களின் சில கட்டுரைகள் தினமணி பத்திகையில் வெளிவந்தன. சில கட்டுரைகள் வானொலியில் ஒலிபரப்பாகி உள்ளன. 92 வயதாகும் இவரது தந்தை வேதமுத்து இன்றும் புத்தகங்கள் எழுதி வருகிறார்.

கிராம, ஒன்றிய, வட்டார அளவில் சிறப்பாகப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் இவரது தந்தை உருவாக்கிய வேதமுத்து கல்வி அறக்கட்டளை கடந்த 25 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து தரும் பணியை ஆனந்தா கல்லூரி நிர்வாகத்திடம் இப்போது ஒப்படைத்துள்ளார். அந்தப் பணியினை ஆனந்தா கல்லூரி நிர்வாகம் சிறப்பாகச் செய்து வருகிறது.    

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு இவரது தந்தை தனது உடலைத் தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களுக்குச் சுற்றுலா பயணம் செய்துள்ள அமல்ராஜ், தாய்லாந்து நாட்டிற்கு இரண்டு முறையும், சிங்கப்பூர், மலேஷியா, உஸ்பெகிஷ்தான் போன்ற வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளார்.

நட்புக்கும், மரியாதைக்கும், முற்போக்கு சிந்தனைக்கும் சொந்தக்காரரான அமல்ராஜ், எப்போதும் ஜாலியாக சிரித்துப் பேசக் கூடிய சுபாவம் உள்ளவர். வெளிப்படையாகப் பேசக் கூடியவர், தைரியமான மனிதர் என்று சக நண்பர்களால் கொண்டாடப்படும் அமல்ராஜ், எங்கள் நட்பு வட்டத்திற்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் எனலாம்.  

‘கனரக வாகன அதிபர்’ தளபதி பிரேம்குமார்.

'தளபதி' பிரேம்குமார்.

எங்கள் நட்பு வட்டத்தில் எல்லோராலும் தளபதி என்று அன்புடன் அழைக்கப்படுபவர், நண்பர் பிரேம்குமார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ஸ்ரீராமுலு – தரணிதேவி தம்பதிக்கு லீலாவதி, கௌசல்யா என இரு மகள்களும், நரேந்திரபாபு, பிரேம்குமார் என இரு மகன்களும் பிறந்தனர்.

ராணுவத்தில் இருந்த ஸ்ரீராமுலு, டெல்லி, சென்னை, தூத்துக்குடி என்று பல துறைமுகங்களில் பணியாற்றியவர். தமிழகத் துறைமுக அதிகாரியாக அவர் இருந்த போது சென்னையை அடுத்த தாம்பரத்தில் வீடு கட்டிக் குடியேறினார்.

அங்கு 1961 ஆம் ஆண்டு பிறந்தவர் பிரேம்குமார். தாம்பரம் சேவாசதன் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த பிரேம்குமார், அதன் பிறகு பல்லாவரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ முடித்தார்.  அமிஞ்சிகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தவர், அதன் பிறகு அரசு வேலைக்கு முயற்சி செய்தார்.

அரசு வேலை உடனடியாக கிடைக்கவில்லை. ஒருநாள் தனது தந்தையைப் பார்க்க துறைமுகத்திற்கு சென்ற போது, பாரிமுனையில் உள்ள ஷிப்பிங் சர்வீஸ் நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலை தேவை என்பதை அறிந்தார். அரசு வேலைக்கு முயற்சி செய்வது ஒரு புறம் இருந்தாலும், கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து அந்த நிறுவனத்தில் சேர்ந்தார்.

விழா ஒன்றில் பரிசு கேடயம் பெறுகிறார் பிரேம்குமார் 
பெரிய அளவில் ஏற்றுமதி இறக்குமதி பணிகள் நடைபெறும் அந்த நிறுவனத்தில் தனது திறமையை வளர்த்துக் கொள்ள முயன்றார். அவரது சுறுசுறுப்பையும் ஆர்வத்தையும் பார்த்த ஒருவர், இங்கு அலுவலக உதவியாளராகவே இருந்துவிடாதே. உனக்கென்று ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது. வேறு இடத்திற்கு செல் என்று அறிவுரை கூறியதுடன், ஒரு நிறுவனத்தின் முகவரியையும் தெரிவித்திருக்கிறார்.

அது ஒரு லாரி புக்கிங் ஆபீஸ். அங்கு லாரி புக்கிங் கிளார்க் வேலை பிரேம்குமாருக்குக் கிடைத்தது. மேலாளர் பிரகாஷ், இவரது திறமையை மேலும் உயர்த்தக் காரணமாக இருந்தார். தன்னை மேம்படுத்திக் கொள்ள நிறைய விஷயங்களை அங்கு பிரேம்குமார் கற்றுக் கொண்டார். தொலைபேசி தொடர்புகள், பேச்சுத் திறமைகள் அவருக்குக் கை கொடுத்தன.

அந்த வேலை.... நிறுவனத்திற்கு மட்டுமல்ல, பிரேம்குமாருக்கும் அதிகம் பிடித்துப் போனது.

நிறைய நிறுவனங்களுடன் தொடர்பு. உள்நாடு – வெளிநாடு, ஏற்றுமதி - இறக்குமதி என 1985 முதல் 1991 வரை காலம் படு வேகமாகக் கடந்தது கூட அவருக்குத் தெரியவில்லை.

விழா ஒன்றில் கௌரவிக்கப்படுகிறார்  பிரேம்குமார் 
கிரிக்கெட், ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தவர்,  வேலைக்கு இடையூறாக இருக்கும் என்று தனது விளையாட்டு ஆர்வத்திற்கு குட் பை சொல்லிவிட்டார். ஆனால், எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்து எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறி இருந்தார்.

தானும் ஒரு தொழிலாளி என்பதால் தொழிலாளர்களுடன் இணைந்து செயல்பட்டார். இதனால், தொழிலாளர்கள் அவரை தொழிற் சங்கத்தின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர்.

1987 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் சிலரை நீக்கிய போது, நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் துவங்கியது. அதில் அவரும் பங்கெடுத்தார். பலர் கைதான போது, அனைவரையும் ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார், பிரேம்குமார்.

தொழிலாளர்களின் உறுதியான போராட்டம், நிறுவனத்தின் பிடிவாதமான போக்கு காரணமாக அந்த நிறுவனம் அப்போது மூடப்பட்டது. இதனால், அனைவருக்கும் வேலை இல்லாத நிலை உருவானது.

1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் ஒரு நிறுவனத்தை உருவாக்கக் கூடாது என்று விவாதம் நடைபெற்றது. அதன் முடிவில் வலிமையான ஒரு நிறுவனத்தைக் கட்டமைப்பது என்றும், அதற்கு தலைவர் ராமச்சந்திரன் வழிக்காட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்பில் உள்ள எல்லா வாடிக்கையாளர்களையும் பயன்படுத்திக் கொள்வது என்றும், ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு தொகை நிறுவனத்திற்கு முதலீடு செய்வது என்றும் முடிவு செய்த போது, தனது சார்பாக அதிகமாக பதினைந்தாயிரம் முதலீடு செய்தார் பிரேம்குமார். அதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது தாய் மாமன் தோத்தாத்திரி நாயுடு.

தொழிலாளர்களால் ‘எஸ்.ஆர். & கே.டி.’ என்கிற பெயரில் துவங்கப்பட்ட அந்த நிறுவனம் சென்னை, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களில் பார்சல் சர்வீஸ் வேலைகளை வெகு சிறப்பாகச் செய்து கொண்டிருந்தது.

வெற்றி மீது வெற்றி வந்து அவர்களைச் சேர்ந்த போது, போட்டியும் பிரிவும் உருவாயின. 

விளைவு?

சிலர் விலகிச் சென்று வேறு நிறுவனம் தொடங்கினார்கள். தொழில் போட்டி கடுமையானது.

தன்னுடன் உள்ள எட்டு பங்குதாரர்களின் ஒற்றுமையுடன் தனது நிறுவனத்தை இன்றளவும் வெகு சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் பிரேம்குமார். இவர்களிடம் பத்து கனரக வாகனங்கள், ஐந்து மினி லாரிகள் என பதினைந்து லாரிகள் உள்ளன.

இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். அம்பத்தூர், பாடி, பாரிமுனை, போரூர், ஓசூர், பெங்களூர் என ஆகிய ஆறு இடங்களில் அலுவலகங்கள் இயங்குகின்றன. ஓட்டுநர்கள், உதவியாளர்கள், தொழிலாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

ஊழியர்களுக்கும், தொழிலளர்களுக்கும் முதல் தேதியில் நல்ல சம்பளம், எதிர்ப்பார்க்காத போனஸ், தொழிலாளர்களின் குடும்ப நிகழ்வுகளுக்கு உதவி என தனது குடும்பத்திற்கு உதவுவது போலவே தனது தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் உதவி வருகிறார், பிரேம்குமார். அதற்கு அவரது பங்குதாரர்களும் உதவியாக இருக்கிறார்கள்.

‘’என்னுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும்... எனது மனைவி ஷோபாதான் முக்கிய காரணமாக இருக்கிறார்’’ என்று கூறும் பிரேம்குமார், ‘’அவர் வந்த பிறகுதான் எங்களின் நிறுவனத்தை தொடங்கினோம்’’ என்று பெருமைப்படுகிறார்.

தன் மாமனார் நரசிம்மன், மாமியார் சுசீலா, மைத்துனர்கள் சுரேஷ், ரமேஷ், மகேஷ் ஆகியோரும் தனக்கு உதவியாக இருக்கிறார்கள் என்று கூறும் அவர், தனக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் பேசத் தெரியும் என்கிறார்.

பல விழாக்களில் பாராட்டும், பரிசுக் கேடயங்களும் பெற்றிருக்கும் பிரேம்குமார், சூளைமேடு பகுதியில் உள்ள கில்நகர் பூங்கா நடையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தற்போது பதவி வகித்து வருகிறார்.

பிரேம்குமாரின் துணைவியார் ஷோபா பி.ஏ. வரலாறு படித்தவர். இவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் பேச தெரியும். ஓவியக்கலையில் சிறந்து விளங்கும் ஷோபா, அழகுக் கலையிலும், ஆடை வடிவமைப்பதிலும் ஆர்வம் கொண்டவர். சிறந்த பள்ளி ஆசிரியையாகவும் பாராட்டு பெற்றிருக்கும் அவர் மிகச் சிறந்த படிப்பாளி.

பெங்களூர், மைசூர், மும்பை, கோவா, கொல்கத்தா, டெல்லி, புவனேஸ்வரம், ஐதராபாத், விசாகப்பட்டினம், சாலக்குடி என இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ள பிரேம்குமார் இன்று வரை வெளிநாடுகள் எதற்கும் செல்லவில்லை. அதற்குக் காரணம், எனக்கு அதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை என்கிறார்.

இந்தியத் திருநாட்டில் எங்கு பேரிடர் ஏற்படும் போதும் தனது தனிப்பட்ட நிதி உதவி மட்டுமின்றி, தனது நிறுவனம் மூலமாகவும் நிதி உதவி செய்வதில் முதலாவதாக இருக்கும் பிரேம்குமார், அறிந்தவர், அறியாதவர் என யாரேனும் இல்லை என்று வந்துவிட்டால் அவர்களின் பாத்திரம் அறிந்து ஆதரிப்பதிலும் உதவுவதிலும் முதன்மையானவர். தான் செய்யும் உதவிகளை வெளியே தெரிவிக்க விரும்பாத பண்பாளர்.

தன் தனித்தனி திறமைகளால் அந்தத் துறைகளில் மட்டும் முன்னுக்கு வந்தவரை விட அனைத்துத் துறைகளிலும் தன் எண்ணங்களை செலவிடும் பிரேம்குமார், கடந்த முப்பத்தி நான்கு ஆண்டுகளாக லாரி தொழிலில் இயங்கி வருகிறார் என்றால் அதற்குக் காரணம் இவரது தொழில் திறமை, நிர்வாகத் திறமை மட்டுமல்ல, இவரது பழகும் தன்மைக்கும் அதில் முக்கிய பங்குண்டு. 

‘காவல்துறை அதிகாரி’ அல்போன்ஸ்

'போலீஸ் அதிகாரி' அல்போன்ஸ் 
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நாட்டுக்கான சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் ராணுவப் படையில் இருந்த வீரர்களில் ஒருவர் சந்தானசாமி. அவருடைய மகன்தான், நமது அல்போன்ஸ்.

கும்பகோணம் நாச்சியார்கோவில் அருகே உள்ள கோவனூர் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி சந்தானசாமி – சின்னம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் அல்போன்ஸ். இவருக்கு ஆனந்தம், பொன்னுமணி, மரியம்மாள், அன்னம்மாள், ராணி, லூர்துமேரி என ஆறு சகோதரிகள். இதில் அன்னம்மாள் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு பத்து வயதில் காலமாகிவிட்டார்.

கோவனூர் பஞ்சாயத்து பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த அல்போன்ஸ், ஆறாம் வகுப்பு முதல் நாச்சியார்கோவிலில் உள்ள நடுநிலைப்பள்ளியில் படித்தார். ஏழாம் வகுப்பில் வெற்றி அடைந்த போது, அவரது தந்தை ஒரு வழக்கில் சிக்கிச் சிறை செல்ல நேர்ந்தது. அதனால், குடும்ப கஷ்டம் இவரை படிப்பைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளியது.

குடும்பத்தின் கஷ்டத்தை போக்க கூலி வேலைக்கு சென்றார். தலையாரி வேலைதான் என்றாலும் வருமானம் போதவில்லை. வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து புத்திமதிகளையும் வறுமை அவருக்கு அப்போது கற்றுக் கொடுத்தது.

மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அல்போன்ஸ் 
நீதி, நேர்மை, நியாயம், உழைப்பு, சேமிப்பு, முன்னேற்றம் என வெளியுலகம் பற்றிய புரிதல் அவருக்குள் வந்தன.

இதே கூலி வேலையில் தொடர்ந்து இருந்தால் கடைசிவரை கூலிக்காரனாகவே வாழ வேண்டும். படித்தால் முன்னேற்றம் அடையலாம் என்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கியது. இதனால், தனது சித்தப்பா பன்னீர்செல்வம் என்பவரிடம் சென்று தனது எண்ணத்தைத் தெரிவித்தார்.

அவர், இவரை அழைத்துச் சென்று மீண்டும் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எட்டாம் வகுப்பில் மீண்டும் சேர்ந்த அல்போன்ஸ், படிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்தினார். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மாணவனாகப் பாராட்டு பெற்றார்.

‘’படிக்கிற பசங்க படிக்கப் பயந்து மாடு மேய்க்க போகுது. இவன் மாடு மேய்த்துவிட்டு படிக்க வந்திருக்கிறான். எங்கே தேறப் போகிறது’’ என்று கணக்கு போட்ட தலைமை ஆசிரியர் சுந்தரம்பாளின் எண்ணத்தைப் பொய்யாக்கினார் அல்போன்ஸ். 

அவரது படிப்பு ஆர்வத்திற்குத் தலைமை ஆசிரியர் சுந்தரம்பாள், சக மாணவன் கலியபெருமாள் ஆகியோர் தூண்டுகோலாக இருந்தார்களாம்.

தினமும் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று நாச்சியார்கோவில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த அல்போன்ஸ், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்று திறமையான பையன் என்கிற பாராட்டில் நனைந்தார். 

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய பதினாறு பேரில் இவர் மட்டுமே தேர்வானவர் என்பதால் சுற்றுவட்டாரத்தில் இவருக்கு நிறைய மரியாதைகள் கிடைத்தன.

கல்லூரிக்குச் செல்ல வசதி இல்லை என்பதால் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது.

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது திரைப்படங்கள் பார்க்கின்ற வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. அதில் போலீஸ் கதைகள் அவரை வெகுவாக கவர்ந்துள்ளன.

பல குடும்பங்கள் நாசமாகக் காரணமாக இருக்கும் சாராயம் விற்பவர்களை அடித்துச் சிறையில் போடவும், திருடர்களைக் கைது செய்து மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும், அநியாயம் செய்பவர்களை, அக்கிரமக்காரர்களை  அடித்து உதைக்கவும், திருத்தவும் போலீஸ் வேலைதான் சரியானது என்று மனதில் கணக்கு போட்டார்.

அடி மனதில் பதிந்த அந்த போலீஸ் கனவு, அடிக்கடி நினைவுக்கு வந்து ஞாபகப்படுத்தின. ஆனால், குடும்பக் கஷ்டம் அவரை வேலைக்கு அனுப்பியது. கொத்தனார் வேலை, வயல்வேலை என்று தினம் கிடைக்கிற வேலைகளைச் செய்து குடும்பத்தின் வறுமையைப் போக்கக் காரணமாக இருந்திருக்கிறார்.

நாளைக்கு எங்கு வேலை என்று கேட்டு தெரிந்து கொண்ட பின்னரே இரவு படுக்கைக்குச் செல்வாராம். அந்தளவுக்கு வேலையின் மீதும், குடும்பத்தின் மீதும் அல்போன்ஸ் கவனம் செலுத்தி இருக்கிறார்.

ஒரு நாள் தபால் துறையில் வேலை செய்கிற வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. போலீஸ் வேலையை மனதில் வைத்துக் கொண்டு போஸ்ட்மேன் வேலையைப் பார்க்க முடியது என்று மனம் சொல்லியாது. அதனால், அந்த வேலையை நண்பன் பார்த்திபனுக்குச் சொல்லி இருக்கிறார். அந்த வேலை பார்த்திபனுக்குக் கிடைத்துள்ளது.

தஞ்சாவூரில் போலீஸ் வேலைக்கு ஆட்கள் எடுப்பதை தெரிந்து கொண்ட அல்போன்ஸ், அங்கு சென்று முயற்சி செய்துள்ளார். போலீசார் வைத்த அத்தனை டெஸ்ட்டிலும் பாஸ். ஆனாலும் வேலைக்கான ஆர்டர் வரவில்லை.

1969 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட தனக்கு 1970 ஆம் ஆண்டு முடியப் போகிறது. அதுவரை ஆர்டர் வரவில்லை என்று ஆத்திரத்துடன் ஒரு கடிதம் வரைந்தார் அல்போன்ஸ்.

போலீஸ் வேலை கொடுங்கள். இல்லை என்றால் எனது சான்றிதழை திரும்பக்கொடுங்கள் என்று அப்போது தஞ்சாவூரில் எஸ்.பி.யாக இருந்த தேவாரத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

அதன் பிறகு சென்னைக்குச் சென்று போலீஸ் வேலைக்கு முயற்சி செய்வது என்று முடிவு செய்துள்ளார். தனது தந்தையின் நண்பருடைய மருமகன் ஜெயராமன் சென்னையில் போலீஸ் வேலையில் இருப்பது அவருக்குத் தெரிந்த தகவல். அதனால், அவர் மூலமாக முயற்சி செய்வது என்கிற நம்பிக்கையுடன் சென்னைக்கு சென்றார். 

சென்னையில் ஜெயராமனின் முகவரியை கண்டுபிடிக்கவே ஒருவாரம் அவருக்குத் தேவைப்பட்டது. கையில் காசு இல்லாமல் சாப்பிட முடியாத நிலை உண்டானது. பசிக் கொடுமை தாங்க முடியாமல் குழாய் தண்ணீரைக் குடித்து, பனகல் பூங்காவில் உறங்கி வாழ்ந்திருக்கிறார்.

உடனே போலீஸ் வேலை கிடைக்காது. அதற்கான வாய்ப்பு வரும் வரை ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியில் வேலை செய்துகொள் என்று அவருக்கு ஒரு வேலையை நாகராஜ் என்பவர் வாங்கிக் கொடுத்துள்ளார்.

வேஷ்டி கூடாது. பேண்ட் அணியவேண்டும். செருப்பு அணிந்துதான் வரவேண்டுமென்று அங்கு பணித்தார்கள். அதனால், அவருக்கு அழுகையே வந்துவிட்டதாம். கையில் பணம் இல்லாமல் அவற்றை எப்படி பெற முடியும்?.

சூழ்நிலையை அறிந்து அல்போன்ஸ்க்கு உதவியுள்ளார் நாகராஜ். ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியில் நான்கு மாதங்கள் தினசரி கூலிக்கு வேலை செய்துள்ளார்.

போலீஸ் வேலைக்கு ஆள் எடுப்பதை ஜெயராமன் மூலம் அறிந்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அல்போன்ஸ் ஓடி இருக்கிறார். அன்று இருநூறு பேர் பங்கேற்றுள்ளனர். அனைத்து பரிசோதனைகளும் முடிந்து எண்பது பேர் தேர்வானார்கள். அதில் அல்போன்ஸும் தேர்வானார்.

ஆர்டர் வருவதற்குள் வீட்டுக்குச் சென்று வரவேண்டும் என்று முடிவு செய்த அல்போன்ஸ், ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனிக்குச் சென்று விடுமுறை எழுதி கொடுத்துவிட்டு சொந்த கிராமத்திற்கு சென்றார். 
  
முதலில் சென்ரல் ரிசர்வ் போலீஸ் வேலையில் சேர ஆர்டர் வந்தது. அந்தக் கடிதத்தை ஜெயராமனிடம் காட்டிய போது, சிட்டி போலீசுக்குப் போகலாம் என்று காத்திருக்க வைத்திருக்கிறார்.

1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி சிட்டி போலீஸ் வேலை ஆர்டர் வந்தது. எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சி. ஆனால் கையில் பணம் இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் நண்பர் லட்சுமணனைச் சந்திக்க சென்றார்.

திருமண மகிழ்ச்சியில் இருந்த லட்சுமணன், அல்போன்ஸ் தெரிவித்த செய்தியைக் கேட்டு மேலும் மகிழ்ச்சிக்கு ஆளானதுடன், மணமகனாகக் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் போது தனக்கு அன்பளிப்பாக வழங்கிய பணத்தை எடுத்து அல்போன்சுக்கு கொடுத்து உதவி இருக்கிறார்.

நண்பன் லட்சுமணன் கொடுத்த இருபத்தி ஐந்து ரூபாய் பணத்துடன் சென்னை சென்ற அல்போன்ஸ், ஒன்பது மாதங்கள் பயிற்சி, பந்தோபஸ்து என்று காலத்தைக் கடந்திருக்கிறார். சட்டங்கள் குறித்து சப் இன்ஸ்பெக்டர் பிர்லாபோஸ் என்பவரிடம் கற்றிருக்கிறார்.

எஸ்.எஸ்.எல்.சியில் தேர்வு பெற்றிருந்ததால், கமிஷனர் அலுவலகத்தில்  முதலில் வேலை கிடைத்தது. அதன் பிறகு 1974 ஆம் ஆண்டு ஆயுதப்படையிலும், 1978 ஆம் ஆண்டு மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்திலும் பணி அமர்த்தப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவுப் பணிக்குச் சென்றார். அதன் பிறகு அண்ணாசாலை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியமர்த்தப்பட்டார்.

1985 ஆம் ஆண்டு முதல்நிலை காவலர் என்கிற ‘கிரேடு ஒன்’ பதவி உயர்வு இவருக்குக் கிடைத்தது. 1986 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த அல்போன்ஸ், 1990 ஆம் ஆண்டு சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்திற்கு சென்றார். 1995 ஆம் ஆண்டு அவருக்குத் தலைமை காவலர் பதவி உயர்வு கிடைத்தது.

எழும்பூர் காவல் நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர், அதன் பிறகு மீண்டும் சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்திற்குச் சென்றார். 2003 ஆம் ஆண்டு அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி கிடைத்தது.

அதன் பிறகு டி.ஜி.பி. அலுவலகத்தில் கண்ரோல் ரூம் பணிக்குச் சென்றவர் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்றார்.

பணியில் இருக்கும் போது செல்வாக்கு உள்ள சில ரவுடிகளை துணிச்சலாகக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். அதற்காக ஒரு புறம் பாராட்டும், மறுபுறம் மிரட்டலையும் சந்தித்திருக்கிறார்.

பாட்டி செபஸ்டியம்மாள் கேட்டுக் கொண்டது போல போலீஸ் வேலைக்குச் சென்ற பிறகு தனது சித்தப்பா மகன்கள் மூன்று பேரையும் போலீஸ் வேலையில் சேரவும் காரணமாக இருந்திருக்கிறார். தனது மைத்துனர்  போலீஸ் வேலையில் சேர காரணமாக இருந்திக்கிறார்.

போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் போது, இவருக்குத் திருமணம் செய்து வைக்க இவரது சித்தப்பா பன்னீர்செல்வம் முயற்சி செய்துள்ளார். தனக்கு போலீஸ் வேலை முதலில் கிடைக்க வேண்டும். தனது சகோதரிகள் திருமணம் நடைபெற வேண்டும். அதன் பிறகுதான் தனது திருமணம் என்று பிடிவாதம் கட்டி இருக்கிறார்.  

அதனால், அவரது அத்தை மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை.

தனது சகோதரிகளை பண்டாரவாடை, மாத்தூர், கும்பகோணம், வீரராகவபுரம், காசாகுடி ஆகிய இடங்களில் திருமணம் செய்து கொடுத்துள்ள அல்போன்ஸ் தனது திருமணத்துடன் சேர்த்து பதிமூன்று திருமணங்கள் தனது குடும்பத்தில் நிகழக் காரணமாக இருந்திருக்கிறார்.

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பிராஜா – மரியநட்சத்திரம் தம்பதியின் மகள் அடைக்கலமேரி என்பவரை 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் அல்போன்ஸ். இவர்களுக்கு ஆரோக்கிய சந்தான ஜீசஸ் மேரி, மரியகிரேட் சில்வியா என்கிற இரு மகள்களும், அலெக்சாண்டர் என்கிற ஒரு மகனும் பிறந்தனர்.

பி.பி.ஏ. படித்த மூத்த மகள் ஆரோக்கிய சந்தான ஜீசஸ் மேரியை, நாச்சியார்கோவில் அருகே உள்ள மாத்தூர் ஜெகநாதன் – அந்தோணியம்மாள் தம்பதியின் மகன் தாமஸ் துரைராஜ் என்பவருக்கு 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு நித்திய அல்போன்சா என்கிற மகள் இருக்கிறார்.

பி.எஸ்.சி. படித்த இரண்டாவது மகள் மரியகிரேட் சில்வியாவை, திருவள்ளூர் எஸ்.அந்தோணி - அந்தோணியம்மாள் தம்பதியின் மகன் ஜான் கென்னடி என்பவருக்கு 2௦௦3 ஆண்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்குக் கேத்தரின் கென்னடி, லீனா கென்னடி என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இப்போது பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

பி.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி படித்துள்ள மகன் அலெக்சாண்டருக்கு, பாண்டிச்சேரி ஸ்டாலின் ஜோசப் – மேரி தம்பதியின் மகள் பிபியானா என்பவரைத் திருமணம் செய்து வைத்துள்ளார். பிபியானா பி.டெக் படித்தவர். இவர்களுக்கு கிறிஸ்டியானா, டேனிலா என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இப்போது கத்தார் நாட்டில் வசித்து வருகிறார்கள்.

காவலர் பணியில் இருந்த போது நரியங்காடு, புதுப்பேட்டை, ஆயிரம்விளக்கு போன்ற காவலர் குடியிருப்புகளில் குடும்பத்துடன் வாழ்ந்த அல்போன்ஸ், 1998 ஆம் ஆண்டு சூளைமேடு பகுதியில் உள்ள முத்துலாண்டி காலனி பகுதியில் சொந்தமாக இடம் வாங்கிக் குடியேறினார்.

நேதாஜி படையில் வீரராக இருந்த காரணத்திற்காக தனது தந்தைக்கு வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை, இப்போது மூன்று ஏக்கர் நிலமாக உயர்த்தி, அங்கு தென்னை, தேக்கு, பலா போன்ற மரங்களையும், கொய்யா, நெல்லி போன்ற செடிகளையும் கொண்ட தோப்பாக உருவாக்கி வைத்திருக்கும், அல்போன்ஸ், விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்கிறார்.

தனது பாட்டனார் மலையப்ப படையாச்சி, பாட்டி செபஸ்டியம்மாள், தந்தை சந்தானசாமி, தந்தையின் மூத்தமனைவி ஜெயம், தனது தாயார் சின்னம்மாள் ஆகியோரின் நினைவு நாளில் கிராமத்திற்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அல்போன்ஸ், காவல் துறையில் பணிபுரியும் போது நேர்மை, கடமை என்று மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. 

தன் வாழ்வுக்கு பாட்டி சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் பொன்மொழியாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்ததால், தன்னுடைய பணிக் காலத்தில் எந்தவிதமான பனிஷ்மென்ட்க்கும் ஆளாகாமல் நல்ல செயலுக்காக ஐம்பத்தி இரண்டு வெகுமதிகளைப் பெற்றுள்ளார்.

நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும் என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளதால் எல்லோராலும் விரும்பப்படும் நல்ல நண்பராக அல்போன்ஸ் இருக்கிறார்.